IRCTC Tatkal Booking: ஆதார் இருந்தா போதும்.. இனி தட்கல் டிக்கெட் ஈசியாக புக் பண்ணாலம்! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
IRCTC Tatkal Booking: தட்கல் டிக்கெட் முன்பதிவு செயல்முறையின் முதல் 10 நிமிடங்களில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாகும். ஆதார் அட்டை பயன்பாடு இல்லாமல் வங்கி சார்ந்த வேலைகள், அரசு திட்டங்கள் எதையும் நம்மலால் பெற இயலாது. அந்த வகையில் தற்போது தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு கூட ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உங்கள் ஐஆர்சிடிசி கணக்கு உங்கள் ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்றால், நீங்கள் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாது என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது
தட்கல் டிக்கெட்:
ஆதார் அட்டை மூலம் கணக்குகள் சரிபார்க்கப்படாத பயனர்களின் கணக்குகளை முழுவதுமாக மூட முடியும் என்று இந்திய ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. இது ரயில்வே பயணிகளுக்கு பெரும் அடியாக இருக்கும். ரயில்வே அறிக்கையின்படி, ஒவ்வொரு நாளும் சுமார் 2.25 லட்சம் பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறார்கள். எனவே, எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள, உங்கள் ஐஆர்சிடிசி கணக்கை உங்கள் ஆதார் அட்டையுடன் இணைப்பது அவசியம்.
போலி கணக்குகள் தடை:
ரயில்வே அறிக்கையின்படி, மே 24 முதல் ஜூன் 2 வரையிலான தரவுகளின்படி, முன்பதிவு சாளரம் திறந்தவுடன், முதல் நிமிடத்திற்குள் மிகக் குறைவான டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் இரண்டாவது நிமிடம் முடிந்ததும், அவற்றின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரிக்கிறது. இதற்குக் காரணம் பாட்கள் மற்றும் போலி கணக்குகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதைத் தடுக்க ரயில்வே ஒரு பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுவரை, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், 2.4 கோடிக்கும் மேற்பட்ட போலி ஐடிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 20 லட்சம் கணக்குகள் விசாரணையில் உள்ளன. ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத கணக்குகள் படிப்படியாக செயலிழக்கப்படும் என்று ரயில்வே தெளிவாகக் கூறியுள்ள்து. போலி ஐடிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு பெரிய அடியாகும்.
மக்களுக்கு பயன்:
ரயில்வேயின் கூற்றுப்படி, தட்கல் டிக்கெட் முன்பதிவு செயல்முறையின் முதல் 10 நிமிடங்களில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஐ.ஆர்.சி.டி.சியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் கூட முதல் 10 நிமிடங்களுக்குள் டிக்கெட் முன்பதிவு பணியை முடிக்க முடியும். கூடுதலாக, ரயில்வேக்கு ஆதார் அடிப்படையிலான OTPகள் கட்டாயமாக மாற வாய்ப்புள்ளது. இது நடந்தால், கவுண்டரில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் அட்டை தேவைப்படும் என்று தெரிகிறது.






















