Internet Shutdown : உக்ரைன், ஈரானை விட மோசம்...இணைய சேவை முடக்கப்படுவதில் இந்தியா முதலிடம்...அதிர்ச்சி ரிப்போர்ட்
உலகம் முழுவதும் டிஜிட்டல் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆக்சஸ் நவ் என்ற அரசு சாரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கலவரங்கள், வன்முறைகள் ஏற்படும்போது அதை கட்டுப்படுத்தும் வகையில் இணைய சேவையினை அரசு நிர்வாகம் முடக்குவது வழக்கமான நடவடிக்கை. ஆனால், சில சமயங்களில், அரசு தவறான நோக்கத்திற்காகவும் இணை சேவையை முடக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மீறப்படும் மனித உரிமைகள்:
குறிப்பாக, மனித உரிமைகளுக்காகவும் நீதி கேட்டு மக்கள் போராடும் போதும் கூட இணை சேவை முடக்கப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், இணைய சேவை முடக்கப்படும் உலக நாடுகளில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் டிஜிட்டல் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆக்சஸ் நவ் என்ற அரசு சாரா நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி இந்தியா தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.
மோசமான இடத்தில் இந்தியா:
நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இணைய சேவை 187 முறை முடக்கப்பட்டுள்ளது. அதில், 84 முறை இந்தியாவில்தான் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 84 முறை இணைய சேவை முடக்கப்பட்டதில் 49 முறை அது ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "அரசியல் ஸ்திரமின்மை மற்றும் வன்முறை காரணமாக காஷ்மீரில் குறைந்தபட்சம் 49 முறை இணைய சேவையை அதிகாரிகள் துண்டித்தனர். இதில், 2022ஆம் ஆண்டு, ஜனவரி மற்றும் பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலத்தில் மூன்று நாள் ஊரடங்கு உள்பட 16 தொடர் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிவைக்கப்படும் காஷ்மீர்:
கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெற்று, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீரில் அரசாங்கம் தொடர்ந்து தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை விதித்து வந்துள்ளது. இதை மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உக்ரைன்:
2022ஆம் ஆண்டு, இணைய சேவை முடக்கத்தில் இந்தியா முதலிடம் பிடித்திருந்தாலும் 2017ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக 100க்கும் குறைவான இணைய சேவை முடக்க சம்பவங்கள் பதிவாகியுள்ளது. பட்டியலில் இரண்டாவது இடத்தில் உக்ரைன் உள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க தொடங்கியதில் இருந்து 22 முறை உக்ரைனில் ரஷியா ராணுவம் இணைய சேவையை முடக்கியுள்ளது.
உக்ரைனை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ஈரான் உள்ளது. 2022 ஆம் ஆண்டில், ஈரான் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அரசு நிர்வாகம் 18 முறை அங்கு இணைய சேவையை முடக்கியுள்ளது.
கடந்த ஒரு ஆண்டு காலமாக ரஷியா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது. இது, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
கடந்தாண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, ரஷிய படையெடுப்பின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு பைடன் அங்கு சென்றிருந்தார். இது உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.