Indias Air Defence System: இந்தியாவின் வான் பாதுகாப்பு எப்படி இருக்கு? ஏவுகணைகளை தாங்குமா? அயர்ன் டோம்-க்கு டஃப் கொடுக்குமா?
Indias Air Defence System: இந்தியாவின் வான் பாதுகாப்பு, இஸ்ரேலின் அயர்ன் டோமுக்கு நிகரானதா? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Indias Air Defence System: இந்தியாவின் வான் பாதுகாப்பு, ஏவுகணைகளை எப்படி கையாளும் என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
இந்திய வான் பாதுகாப்பு:
ஆசிய நாடான இஸ்ரேல் தங்களது பாதுகாபிற்கு அச்சுறுத்தலாக இருக்கும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதேநேரம், தங்கள் மீதான ஏவுகணை தாக்குதலை, அயர்ன் டோம் என்ற வான் பாதுகாப்பு அம்சத்தை கொண்டு தடுத்து வருகிறது. உலகின் சிறந்த வான் பாதுகாப்பு கொண்ட நாடாக இஸ்ரேல் உள்ளது. இந்த சூழலில் தான், இந்தியாவின் வான் பாதுகாப்பு தொடர்பான கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டால், என்ன நடக்கும், எவ்வளவு அழிவை ஏற்படலாம், பாதுகாப்பு அமைப்பு எப்படி செயல்படும் என்பது குறித்து கிழே விவரிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை தளபதி சொல்வது என்ன?
இந்தியாவின் வான் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பேசிய விமானப்படை தளபதி ஏ.பி. சிங், “ஏற்கனவே கைவசம் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தயாராகி வரும் அமைப்புகள் மூலம் மிகவும் திறமையான வான் பாதுகாப்பை கொண்டுள்ளோம். அதேநேரம், முழு நாட்டையும் நாம் பாதுகாக்க வேண்டுமானால், பாதுகாப்பு அமைப்புகள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படும். தற்போது கைவசம் இருப்பதை கொண்டு, நாம் பாதுகாக்க வேண்டிய முக்கிய பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என கூறினார். அதாவது, முழு பாதுகாப்பிற்கான தேவையை காட்டிலும், குறைவான வான் பாதுகாப்பு அம்சங்களே இந்தியாவின் கைவசம் இருப்பதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அம்சங்கள் என்ன?
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் வான் பாதுகாப்பானது, 70 முதல் 80 ஆண்டுகள் பழமையான S-125M Pechora, SAM8 OSA-AK, SAM-6 Kvadrat, SA-13 Strela 10M மற்றும் மனிதனால் எடுத்துச் செல்லக்கூடிய இக்லா போன்ற காலாவதியான வான் பாதுகாப்பு அமைப்புகளையே நாடு நம்பியிருந்தது. எல்-70, ஜூ-23 மிமீ ட்வின்ஸ் மற்றும் ZSU-23mm செல்ஃப் புரபொல்ட் ஷில்கா போன்ற பழைய துப்பாக்கி அமைப்புகளை நாடு இன்னும் இயக்கி வருவது வருத்தமளிக்கிறது. அதே வேளையில், நவீனமயமாக்கல் பாதுகாப்பு துறையில் தீவிரமடைந்து வருகிறது. பழைய துப்பாக்கி அமைப்புகள் படிப்படியாக அகற்றப்பட்டு, மீள்திறன் கொண்ட ஏவுகணை அமைப்புகளால் மாற்றப்படுகின்றன.
ஏவுகணை தடுப்பு அம்சங்கள் என்ன?
ஸ்பைடர், பராக் மற்றும் எஸ்-400 போன்ற ஏவுகணை தடுப்பு அமைப்புகளை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. ஆகாஷ் மற்றும் க்யூஆர்எஸ்ஏஎம் போன்ற ஏவுகணை தடுப்பு அமைப்புகளை உள்நாட்டிலேயே உருவாக்கி வருகிறது. வெளி-வளிமண்டல ஏவுகணை இடைமறிப்புகளுக்கு பிருத்வி ஏர் டிஃபென்ஸ் அமைப்பை (பிஏடி) அமைப்பை இந்தியா கொண்டுள்ளது. நடுத்தர தூரத்திற்கு (100 கிமீக்கு மேல்), மேம்பட்ட வான் பாதுகாப்பு (AAD) ஏவுகணைகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட S-400 ரேஞ்ச் பாதுகாப்பு அமைப்பை கொண்டுள்ளது. குறைந்த வரம்புகள் மற்றும் விரைவான எதிர்வினை இடைமறிப்புக்காக, இப்போது பராக்-8, ஆகாஷ், ஸ்பைடர் போன்ற ஏவுகணைகள் மற்றும் புதிய ரேடார்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட சில பழைய ஆனால் பயனுள்ள அமைப்புகள் வன் பாதுகாப்பில் பயன்படுத்தப்படுகின்றன.
பாதுகாப்பில் ரேடார்கள்:
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு அனைத்து சோதனைகளையும் முடித்து, நாட்டின் ஆயுதப் படைகளின் ஆயுதக் களஞ்சியத்தில் சேர்க்கும் தருவாயில் உள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், தரையிலிருந்து வான் இலக்கை தாக்கக் கூடிய MRSAM மற்றும் LRSAM போன்ற அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அம்சங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. சமீப காலங்களில், இந்தியா சொந்தமாக உருவாக்கியது மட்டுமல்லாமல், உள்வரும் எந்தவொரு ஏவுகணையையும் கண்டறிவதற்கும் கண்காணிப்பதற்கும் பல அதிநவீன ரேடார்களை இறக்குமதி செய்துள்ளது. 1,500 கிமீ தொலைவில் உள்ள ஒரு பொருளைக் கண்டறிந்து அதன் மீது ஏவுகணையை தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நீண்ட தூர டிராக் ரேடார்களும் இதில் அடங்கும்.
இந்தியா நிச்சயமாக அச்சுறுத்தல்களை சிறப்பாகக் கையாளும் திறன் பெற்றுள்ளது. அதேநேரம், அண்டை நாடுகளுடன் இந்தியாவிற்கு இருக்கும் உறவை கருதினால், நம்மால் ஓய்வெடுக்க முடியாது. வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது என்பது அவசியமானது ஆகும். இதற்கு வலுவான அரசியல் விருப்பம் தேவைப்படுகிறது.
இஸ்ரேலுடன் ஒப்பிடலாமா?
இஸ்ரேல் சுமார் 22,000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட ஒரு சிறிய நாடாகும். அதிலும் கிளர்ச்சியாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை நீக்கினால், நிகர பயனுள்ள பகுதி 14,000 சதுர கிமீ மட்டுமே. எனவே, அங்கு வான் பாதுகாப்பை முற்றிலும் உறுதி செய்வது என்பது எளிது. ஆனால், இந்தியாவின் பரப்பளவு இஸ்ரேலை விட 300 மடங்கு பெரியது மற்றும் மக்கள் தொகை 140 மடங்கு அதிகம். இந்தியாவின் வான் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் பாதுகாப்பின் அளவு மிகப் பெரியதாகவும் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டதாகவும் இருக்கும். எனவே, இஸ்ரேலை போன்று முழு வான் பரப்பையும் பாதுகாப்பது என்பது இந்தியாவிற்கு எளிதான காரியம் அல்ல.