(Source: ECI/ABP News/ABP Majha)
INDIAN NAVY: கடற்கொள்ளைக்கு செக்! இந்திய கடற்படையின் மூவ்! கினியா வளைகுடாவில் ஐஎன்எஸ் சுமேதா ரோந்து வெற்றி
INDIAN NAVY: இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல், கினியா வளைகுடா பகுதியில் ரோந்துப் பணியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.
INDIAN NAVY: கினியா வளைகுடா பகுதியில் ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் சேர்ந்து, தங்களது முதல் கூட்டுக் கடற்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளன.
இந்தியா - ஐரோப்பா கூட்டுப் பயிற்சி:
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த கடற்படையின் கப்பல்கள் கினியா வளைகுடாவில் கூட்டுக் கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டன. இந்தப் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் இது மேற்கொள்ளப்பட்டது. பிரஸ்ஸல்ஸில் 2023 அக்டோபர் 5 அன்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா கடல்சார் பாதுகாப்பு உரையாடலின் மூன்றாவது கூட்டத்தைத் தொடர்ந்து இந்த கூட்டுப் பயிற்சி நடைபெற்றது. அதன்படி, கினியா வளைகுடாவில் அக்டோபர் 24 அன்று இந்த கூட்டு கடற்படை பயிற்சி தொடங்கியது.
கூட்டுப் பயிற்சியில் நடந்தது என்ன?
பயிற்சியின் போது, இந்திய கடற்படையின் கடலோர ரோந்து கப்பல் ஐ.என்.எஸ் சுமேதா, கினியா வளைகுடாவில் மூன்று ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் கப்பல்களுடன் இணைந்து பணியாற்றியது. அதாவது இத்தாலிய கடற்படை கப்பல் ஐ.டி.எஸ் ஃபோஸ்காரி, பிரான்ஸ் கடற்படை கப்பலான எஃப்.எஸ் வென்டோஸ் மற்றும் ஸ்பெயின் கடற்படை கப்பல் டோர்னாடோ ஆகிய நான்கு கப்பல்களும், கியானா கடற்கரையில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது, கப்பலில் ஏறுவது, கப்பல்களுக்கு இடையே பணியாளர்களை மாற்றுவது ஆகியவற்றோடு, பிரான்ஸ் கப்பல் வென்டோஸ் மற்றும் இந்திய கடற்படை கப்பல் சுமேதாவில் இருந்து புறப்பட்ட, ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி பறக்கும் பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோக்கம் என்ன?
மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் கினியா வளைகுடாவில் 31 நாட்கள் இந்த ரோந்துப் பணி நடைபெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் கினியா வளைகுடாவில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடலோர நாடுகள் மற்றும் யாவுண்டே கடல்பகுதி பாதுகாப்பை ஆதரிப்பதில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகின்றன.
இந்தியா - கயானா வளைகுடா உறவு:
ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள கினியா வளைகுடா இந்தியாவின் தேசிய நலன்களுக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. நமது நாட்டின் எரிசக்தித் தேவைகளின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், கினியா வளைகுடா பகுதியில் உள்ள நாடான நைஜீரியா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும். 2020 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை சப்ளை செய்யும் நான்காவது பெரிய நாடாக உருவெடுத்தது. இதன் விளைவாகவே அப்பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு இந்தியாவும் முக்கியத்துவம் அளிக்கிறது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் INS தர்காஷால் கப்பல் கொண்டு, இந்தியா சார்பில் கினியா வளைகுடா பகுதியில் முதன்முறையாக ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது INS சுமேதா கொண்டு ரோந்து பணி நடைபெற்றுள்ளது.
கடற்கொள்ளையை தடுப்பதில் பங்களிப்பு:
கினியா வளைகுடாவில் ஐஎன்எஸ் சுமேதாவின் ரோந்துப்பணியானது, இந்தியாவின் தேசிய நலன்களை சார்ந்ததாக மட்டுமல்லாமல், உலகளாவிய கடல்சார் பாதுகாப்பில் நாட்டின் பங்கைளிப்பையும் வெளிக்காட்டியுள்ளது. காரணம் இந்த பிராந்தியத்தில் கடற்கொள்ளை தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதால், கடற்கொள்ளையர் எதிர்ப்பு முயற்சிகளில் இந்தியக் கடற்படையின் அர்ப்பணிப்பு சர்வதேச கடல்சார் ஒத்துழைப்பில் முக்கியத்துவத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 2021 ஆம் ஆண்டில், பல இந்தியர்கள் அந்த பிராந்தியத்தில் கடற்கொள்ளையர்களால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இது போன்ற சம்பவங்கள் கினியா வளைகுடா பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.