காசாவில் சிக்கியுள்ள இந்தியர்கள்.. மீட்க முடியாமல் தவிக்கும் மத்திய அரசு.. நடக்கப்போவது என்ன?
காசாவில் இந்தியர்கள் சிக்கியிருப்பதால் அவர்களை மீட்க இந்தியா தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இஸ்ரேல் போர் உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடந்து வரும் மோதல் மக்களின் மனசாட்சியை உலுக்கி வருகிறது. இந்த மோதலை ஹமாஸ் அமைப்ப தொடங்கியிருந்தாலும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் பதில் நடவடிக்கைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
ஹமாஸ் - இஸ்ரேல்:
காசாவில் கடந்த 11 நாள்களாக இஸ்ரேல் நடத்தி வரும் போரில் 3,478 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 12,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், இஸ்ரேலில் ஹமாஸ் படை நடத்திய ஏவுகணை தாக்குதலில் 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும் குழந்தைகள் உள்பட 199 பேரை ஹமாஸ் படை பணயக்கைதியாக பிடித்து வைத்திருப்பதாகவும் இஸ்ரேல் அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
காசாவில் சிக்கியுள்ள இந்தியர்கள்:
காசாவில் இந்தியர்கள் சிக்கியிருப்பதால் அவர்களை மீட்க இந்தியா தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், காசாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமமாக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியவுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "காசாவில் நான்கு இந்தியர்கள் சிக்கியுள்ளனர். தற்போது அவர்களை வெளியேற்றுவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை. காசாவின் நிலைமை மீட்பு நடவடிக்கைக்கு கடினமாக உள்ளது. ஆனால், எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், நாங்கள் அவர்களை மீட்போம். அவரில் ஒருவர் மேற்குக் கரையில் உள்ளார்.
காசாவில் இந்தியர்கள் யாரும் கொல்லப்பட்டதாகவோ, காயம் அடைந்ததாகவோ தகவல் கிடைக்கவில்லை. இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறேன். பொதுமக்கள் உயிரிழப்புக்கும் அங்கு நிலவி வரும் நிலைமை குறித்தும் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?
பிரதமரின் ட்வீட்டைப் பார்த்திருப்பீர்கள். பொதுமக்களின் மரணம் குறித்து பிரதமர் தனது கவலையை தெரிவித்துள்ளதோடு, குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். அனைத்து வகையான வன்முறைகளையும் இந்தியா கண்டிக்கிறது. பாலஸ்தீனப் பிரச்னையில், இரு நாட்டு கொள்கையில் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக எங்கள் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடந்த போரில் இந்தியர் ஒருவர் காயம் அடைந்தார். தெற்கு இஸ்ரேலின் அஷ்கெலோன் நகரில் வீடு ஒன்றில் இவர் உதவியாளராக பணி செய்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் படை தாக்குதல் நடத்தியபோது, அவர், தனது கணவருடன் வீடியோ கால் பேசிக் கொண்டிருந்தார்.
அப்பாவி மக்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதுமட்டும் இன்றி, காசா நகர மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்தியுள்ள வான்வழி தாக்குதல் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 500 பேர் உயிரிழந்திருக்கலாம் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.