Nupur Sharma remarks: நுபூர் சர்மாவின் சர்ச்சை கருத்து... இந்திய தூதர்களை அழைத்துக் கண்டனம் தெரிவித்த அரபு நாடுகள்
முகமது நபி தொடர்பாக பாஜகவின் நுபூர் சர்மா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்த நுபூர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகிய இருவரும் இஸ்லாம் மதம் தொடர்பாக தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்காரணமாக அந்த இருவரையும் அக்கட்சி நீக்கி உத்தரவிட்டது. மேலும் அவர்கள் கருத்திற்கும் பாஜகவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கத்தார்,குவைத்,ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளிலுள்ள இந்திய தூதர்கள் அழைக்கப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கத்தார் நாடு இந்திய தூதரை அழைத்து தன்னுடைய கண்டனத்தை பதிவிட்டுள்ளது. அதில், “இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்பை உண்டாகும் கருத்துகளை ஒரு போதும் ஏற்க முடியாது. மேலும் உலகளவில் வளர்ச்சிக்கும் இந்திய வளர்ச்சிக்கும் பாடுபடும் சமூகத்தில் ஒன்றான இஸ்லாம் மீது இதுபோன்ற கருத்துகள் ஏற்புடையதில்லை. மேலும் முகமது நபி தொடர்பாக அவர் கூறிய கருத்துகள் முற்றிலும் தவறான ஒன்று” எனத் தெரிவித்திருந்தது.
Spokesperson for Ministry of Foreign Affairs @majedalansari : Qatar Demands Public Apology from Indian Government for Remarks of Official in Ruling Party Against Prophet Mohammed#MOFAQatar pic.twitter.com/NnN1khKw6X
— Ministry of Foreign Affairs - Qatar (@MofaQatar_EN) June 5, 2022
கண்டனத்திற்கு இந்தியாவின் பதில்:
இந்த கண்டனத்திற்கு கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் பதிலளித்துள்ளார். அதில், “வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய கலாச்சார பாரம்பரியங்களின் படி இந்திய அரசு எப்போதும் அனைத்து மதங்களுக்கும் உரிய மரியாதையை அளித்து வருகிறது. தவறான மற்றும் இழிவுப்படுத்தும் கருத்துகளை தெரிவித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஈரான் மற்றும் குவைத் நாடுகளும் இந்திய தூதரை அழைத்து தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இஸ்லாமிய மதம் மற்றும் முகமது நபி தொடர்பான தவறான கருத்துகளுக்கு அந்த நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவை தவிர ஓமான் நாடு இந்திய பொருட்களை புறகணிக்க வேண்டும் என்று அந்நாட்டின் கிராண்ட் முஃப்தி ஷேக் அல் கலீலி கோரிக்கை விடுத்துள்ளார்.
பாஜக எடுத்த நடவடிக்கை:
இதற்கிடையே தவறாக கருத்து கூறிய இரண்டு நபர்களை பாஜக கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. அத்துடன் அவர்கள் மீது விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் கூறிய கருத்துகளுக்கும் பாஜகவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்