நடுக்கடலில் ஆபத்தான நிலையில் இருந்த நோயாளி.. காப்பாற்றி அசத்திய கடலோர காவல்படை!
நடுக்கடலில் கப்பலில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய இந்தியரை கடலோர காவல்படை வீரர்கள் மீட்டு அசத்தியுள்ளனர். இந்த சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.
குஜராத்தின் மங்ரோல் கடற்கரையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள காபோன் குடியரசின் மோட்டார் டேங்கர் கப்பலில் இருந்து மோசமாக நோய்வாய்ப்பட்ட இந்திய நாட்டவரை இந்திய கடலோர காவல்படை வீரர்கள் இன்று மீட்டனர்.
நோயாளி மிகக் குறைந்த நாடித்துடிப்புடன், உடல் உணர்வற்ற நிலையில் காணப்பட்டார். கடலோரக்காவல் படை தகவல் அறிந்ததும், ஒரு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரை விரைவாக அனுப்பியது. இது அதிக தீவிரம் கொண்ட காற்று, பலத்த மழை, மோசமான வானிலை ஆகியவற்றையும் மீறி மோட்டார் டேங்கர் கப்பலுக்கு சென்றது.
மோட்டார் டேங்கருக்கு மேல் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்ட ஹெலிகாப்டர், நோயாளியை வெளியேற்ற ஒரு மீட்பு கூடையை பயன்படுத்தியது. மேல் சிகிச்சைக்காக அவர் போர்பந்தருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த வெற்றிகரமான மீட்பு , கடல்சார் பாதுகாப்பிற்கான கடலோரக் காவல் படையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும், மிகவும் பாதகமான நிலைமைகளையும் சமாளிக்கும் அதன் தயார்நிலையையும் எடுத்துக் காட்டுகிறது.
இதேபோன்று, சமீபத்தில், மீன்பிடி படகில் மீன்பிடிக்க செல்லும் போது படகில் இருந்து தவறுதலாக விழுந்த நடுக்கடலில் தத்தளித்த வாலிபரை புதுச்சேரியில் கடலோர காவல் படையினர் மீட்டனர். இந்திய கடலோர காவல்படையின் ரோந்து படகு INTERCEPTOR CRAFT 307 வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொண்டிருந்தது.
பாண்டி மெரினா கடல் பகுதியில் யாரோ ஒருவர் தத்தளிப்பதை அவர்கள் கண்டுள்ளனர். உடனே படகை வேகமாக அவரை நோக்கி திரும்பியுள்ளனர். அப்போது படகில் இருந்த உயிர் மிதவையை அவரை நோக்கி வீசி அவரை பத்திரமாக மீட்டனர்.