India China Clash: சீனாவிற்கு பதிலடி.. அருணாச்சலபிரதேசத்தில் இந்திய விமானப்படை விமானங்கள் கண்காணிப்பு..
சீனாவின் வான்வழி அத்துமீறல்களை தடுக்க அருணாச்சல பிரதேசத்தில் இந்திய விமானப்படை விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சீன - இந்திய ராணுவ வீரர்கள் மோதல்:
கடந்த வாரம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து ராணுவத்தை திரும்பபெறும் நடவடிக்கைக்கு முன்பாக, அருணாச்சல பிரதேசத்தில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கிடையே மோதல் வெடித்தது. 9ஆம் தேதி நடந்த மோதலில் இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் அதற்கு பின்னர், அப்பகுதியிலிருந்து இர தரப்பு வீரர்களும் பின்வாங்கியிருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அருணாச்சல பிரதேசத்தில் தவாங் பகுதியில் இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கண்காணிப்பு பணியில் இந்திய போர் விமானங்கள்:
இதனிடையே, கடந்த சில வாரங்களாகவே சீன ராணுவத்தின் ஆளில்லா டிரோன் விமானங்கள், அருணாச்சலபிரதேசத்தில் அத்துமீறி நுழைந்துள்ளன. இதனை தடுக்கும் பொருட்டு இரண்டு, மூன்று முறை அவசர கதியில் இந்திய விமானங்கள் புறப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வான்வழி அச்சுறுத்தலை தடுக்க, SU-30MKI ரக விமானங்கள் அவசர கதியில் வானில் பறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், சீனாவின் அத்துமீறலை தடுக்க இந்திய விமானப்படையை சேர்ந்த போர் விமானங்கள் அருணாச்சலபிரதேச வான்வெளி பகுதியில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்:
தவாங் பகுதியில் நடைபெற்ற மோதல் தொடர்பாக மக்களவையில் விளக்கம் அளித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டிசம்பர் 9 அன்று சீன துருப்புகள் அத்துமீறி நுழைந்து எலைப்பகுதியில் நிலவும் தற்போதைய நிலையை மாற்ற முயன்றனர். இந்த முயற்சியை நமது ராணுவ வீரர்கள் உறுதியான முறையில் சமாளித்தனர். சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதைத் துணிச்சலாகத் தடுத்து, அவர்களைத் தங்கள் நிலைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மோதல் சம்பவம் தொடர்பாக சீனாவிடம் ராஜதந்திர வழிகளிலும் விளக்கப்பட்டுள்ளது. எல்லைகளைக் காக்க நமது படை வீரர்கள் உறுதிபூண்டுள்ளனர். அதற்குச் சவாலாக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் முறியடிக்கத் தயாராக இருப்பதாகவும், மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
3 ஆண்டுகளாக தொடரும் பதற்றம்:
இந்திய - சீன எல்லை பகுதியான கல்வானில் இரு நாட்டு பாதுகாப்பு படைகளுக்கிடையே கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த மோதல் சம்வபத்தை தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதலில் 4 சீன வீரர்கள் உயிரிழந்ததாக சீன தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தபோதிலும், அதை விட 9 மடங்கு அதிகமான எண்ணிக்கையில் உயிரிழப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
கல்வான் மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்திய - சீன உறவில் இச்சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரச்னைக்குரிய இடங்களில் ராணுவ வீரர்களை திரும்ப பெற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இருப்பினும், சில இடங்களில் ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
கல்வான் சம்பவத்தை தொடர்ந்து, பாங்காங் ஏரியின் தென்கரையில் சிறிய தகராறு ஏற்பட்டது. இம்மாதிரியான சிறிய தகராறு ஏற்பட்டபோதிலும், பெரிய மோதல் வெடிக்காமல் இருந்தது. கல்வான் மோதலுக்கு பிறகு, இந்திய சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதை தொடர்ந்து, லடாக்கில் உள்ள கோக்ரா வெந்நீரூற்று உள்ளிட்ட பிரச்சினைக்குரிய பகுதிகளில் இருந்து இரு தரப்பு ராணுவ வீரர்களும் பின்வாங்கினர். இம்மாதிரியான தகராறு 2006ஆம் ஆண்டிலிருந்து எல்லை வரையறையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நிகழ்ந்து வருகிறது.
அருணாச்சல பிரதேசத்தில் இந்திய சீன எல்லைபகுதியான தவாங்கில் இரு தரப்பு ராணுவ வீரர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட பகுதிகள், தங்களுடைய எல்லைக்குட்பட்டு வருவதாக இரு தரப்பும் கூறி வருவதால் பிரச்சினை நிலவிவருகிறது. இந்நிலையில்தான் அருணாச்சல பிரதேசத்தில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கிடையே மோதல் வெடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மத்தியில், எல்லை பகுதியில் அமைதியை நிலைநாட்டும் வகையில் இந்திய தரப்பு சீன தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.