Atiq ahmed Murder: ஆதிக் அகமது சுட்டுக்கொலை; இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் - பகிரங்க மிரட்டல் விடுத்த அல்கொய்தா
அல்கொய்தா கடந்த சனிக்கிழமையன்று அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்துள்ளது.
இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அல் கொய்தா (AQIS) என்ற பயங்கரவாத அமைப்பு, கடந்த சனிக்கிழமை உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள அதிக் அஹ்மத் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோரின் கொலைக்கு பழிவாங்க இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளது.
வெளியிட்ட ஏழு பக்க இதழ்
ரமலான் நிகழ்வையொட்டி, அல்கொய்தாவின் பிரச்சார ஊடகப் பிரிவான அஸ்-சஹாப் வெளியிட்ட ஏழு பக்க இதழில், சில செய்திகளை வெளியிட்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் இருந்து அதன் உறுப்பினர்களை விடுவிக்குமாறு ஒரு மறைமுக அச்சுறுத்தலை பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளது.
அதில், "நாங்கள் அடக்குமுறையாளர்களை எதிர்த்து நிற்போம், அது வெள்ளை மாளிகையாக இருந்தாலும் சரி, டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லமாக இருந்தாலும் சரி, அல்லது ராவல்பிண்டியில் உள்ள GHQ ஆக இருந்தாலும் சரி. டெக்சாஸிலிருந்து திகார் முதல் அடியாலா வரை - அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் அவர்களின் கட்டுகளிலிருந்து விடுவிப்போம்," என்று எழுதியிருந்தது.
அதிக் & அஷ்ரஃப் சுட்டுக்கொலை
பிரயாக்ராஜ் மருத்துவமனையில் காவல்துறையினர் கட்டுப்பாட்டில், ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பத்திரிகையாளர்கள் போல் காட்டிக்கொண்ட மூன்று நபர்களால் அதிக் மற்றும் அஷ்ரஃப் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள மிகப்பெரிய மசூதிக்கு அருகில் நேற்று அதிக் அகமது மற்றும் அஷ்ரஃப் ஆகியோரைப் புகழ்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட நிர்வாகம் பாட்னாவில் உள்ள ஜமா மஸ்ஜித்தின் நிர்வாகக் குழுவின் தலைவரான முகமது பைசல் இமாமின் அறிக்கையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து பிரச்சனை பெரிதாகாமல் கட்டுக்குள் வைக்க முயற்சித்துள்ளனர்.
பிரச்சனையை கட்டுக்குள் வைக்க முயற்சி
தொழுகைக்குப் பிறகு கோஷங்கள் எழுப்பப்படுவது பற்றி அறிந்ததும், பாட்னா சந்திப்பை ஒட்டி அமைந்துள்ள, நெரிசலான மசூதிக்கு வருகை தந்த அதிகாரிகள் செய்தியாளர்களிடம், "அதிக் அகமது தொடர்பான விவகாரம் உத்தரப்பிரதேசம் தொடர்பானது. பீகாரில், நிதிஷ் குமார் அரசாங்கம் சிறந்த சட்டம் ஒழுங்கை உறுதி செய்துள்ளது," என்று கூறினர். இதுகுறித்து பாட்னாவின் மூத்த போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் மிஸ்ரா, செய்தி நிறுவனமான பிடிஐயிடம் கூறுகையில், “சம்பவம் தொடர்பாக நாங்கள் எந்தக் கைதும் அல்லது தடுப்புக் காவலும் செய்யவில்லை. ஆனால் நிலைமையைக் கருத்தில் கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்," என்றார்.
ஓவைசி காட்டம்
AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி, அதிக் அகமது மற்றும் அவரது சகோதரரை சுட்டுக் கொன்றவர்கள் மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயின் வழியை பின்பற்றுவதாகவும், அவர்கள் பயங்கரவாதிகள் என்றும் கூறினார். ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ஒவைசி, அவர்கள் மீது ஏன் UAPA போடவில்லை என்று கேள்வி எழுப்பினார். போலீஸ் காவலில் இருந்த அதிக் மற்றும் அஷ்ரப் கொல்லப்பட்டது தொடர்பாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தநாத்தை தாக்கி பேசினார்.
ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி குற்றவாளிகள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட அவர், தலா ₹8 லட்சம் மதிப்புள்ள ரிவால்வர் எப்படி அவர்களுக்கு கிடைத்தது என்று ஆச்சரியப்பட்டார். இருவரையும் கொல்வதற்கு முன்பு குற்றவாளிகளுக்கு குறைந்தது ஒரு மாதமாவது பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி கூறியதை மேற்கோள் காட்டி ஊடக அறிக்கை ஒன்றையும் ஓவைசி மேற்கோள் காட்டினார்.