India Justice Report: 2025-ம் ஆண்டுக்கான நீதி அமைப்புகளின் செயல்பாடு அறிக்கை.. தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா.?
2025-ம் ஆண்டில், இந்தியாவில் நீதித்துறையின் செயல்பாடு எந்த அளவிற்கு இருந்துள்ளது என்பது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு எந்த இடத்தை பிடித்துள்ளது தெரியுமா.?

இந்தியாவில் காவல்துறை, நீதித்துறைகளின் செயல்பாடு எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், முதல் 5 இடங்களை தென் மாநிலங்களே பிடித்துள்ளன. அந்த அறிக்கையின்படி, மேற்கு வங்கம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
நீதியின் நான்கு தூண்களின் செயல்பாடு குறித்த அறிக்கை
நீதியின் நான்கு தூண்களான காவல்துறை, நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் சட்ட உதவி ஆகியவற்றின் மீது மாநிலங்களின் செயல்திறன் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குற்றங்களை எதிர்த்து போராடுவதிலும், நீதி வழங்குவதிலும் மாநிலங்கள் எந்த அளவிற்கு செயல்படுகின்றன என்பது குறித்து அந்த அறிக்கை விளக்குகிறது.
2025 நீதித்துறையின் 4-வது அறிக்கையின்படி, ஒட்டுமொத்த செயல்பாடுகளில் கர்நாடகா முதலிடத்தை பிடித்துள்ளது. ஆந்திரா இரண்டாவது இடத்தையும், தெலங்கானா 3-வது இடத்தையும், கேரளா 4-வது இடத்தையும், தமிழ்நாடு 5-வது இடத்தையும் பிடித்துள்ளன. இப்படி, முதல் 5 இடங்களை தென் மாநிலங்கள் பிடித்து அசத்தியுள்ள நிலையில், மேற்கு வங்கம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
துறை வாரியாக பார்க்கும்போது, காவல்துறை செயல்பாடுகளில், தெலங்கானா முதலிடத்தையும், 2-வது இடத்தை ஆந்திராவும், 3-வது இடத்தை கர்நாடகாவும், 4-வது இடத்தை சட்டீஸ்கரும், 5-வது இடத்தை மகாராஷ்டிராவும் பிடித்துள்ளன. காவல்துறை செயல்பாட்டை பொறுத்தவரை தமிழ்நாடு 13-வத இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளின் செயல்பாடுகளை பொறுத்தவரை, தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. 2-வத இடத்தை கர்நாடகாவும், 3-வது இடத்தை கேரளாவும், 4-வது இடத்தை ஆந்திராவும், 5-வது இடத்தை மத்திய பிரதேசமும் பிடித்துள்ளன.
நீதித்துறையை பொறுத்தவரை, கேரளா முதலிடத்தை பிடித்துள்ளது. 2-வது இடத்தை தெலங்கானாவும், 3-வது இடத்தை தமிழ்நாடும், 4-வது இடத்தை கர்நாடகாவும், 5-வது இடத்தை ஆந்திராவும் பிடித்துள்ளன.
சட்ட உதவிகளை பொறுத்தவரை, கர்நாடகா முதலிடத்தை பிடித்துள்ளது. 2-வது இடத்தை பஞ்சாபும், 3-வது இடத்தை ஹரியானாவும், 4-வது இடத்தை உத்தரகண்ட்டும், 5-வது இடத்தை ஆந்திராவும் பிடித்துள்ளன. சட்ட உதவிகள் வழங்குவதில் தமிழ்நாடு 16-வது இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு பிடித்துள்ள இடங்கள்
- ஒட்டுமொத்த செயல்பாடுகள் - 5வது இடம்
- காவல்துறை - 13வது இடம்
- சிறைச்சாலைகள் - முதல் இடம்
- நீதித்துறை - 3வது இடம்
- சட்ட உதவிகள் - 16வது இடம்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள நீதிபதி இடங்கள் எவ்வளவு.?
இந்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் இடங்கள் 13.3 சதவீதமாகவும், கீழமை நீதிமன்றங்களில் 25.3 சதவீத நீதிபதி இடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, அதிகபட்சமாக உயர்நீதிமன்ற நீதிபதி இடங்களை காலியாக வைத்துள்ள மாநிலமாக 50.6 சதவீதத்துடன் உத்தரப்பிரதேம் உள்ளது.
இதேபோல், இந்தியா முழுவதிலும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 51 சதவீத வழக்குகள் 5 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

