'15.3% பேருக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு!' - உலகப் பட்டினிக் குறியீட்டில் பின்தங்கிய இந்தியா!
2021ஆம் ஆண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கணக்கிடப்பட்ட 116 நாடுகளுள் இந்தியா 101வது இடத்தைப் பெற்றுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கணக்கிடப்பட்ட 116 நாடுகளுள் இந்தியா 101வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு, இதே கணக்கெடுப்பில் இந்தியாவுக்கு 94வது இடம் அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டை விட, இந்தியா பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் பின்தங்கியுள்ளது கடுமையாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்தக் குறியீட்டு அறிக்கையின்படி, இந்திய மக்கள்தொகையில் சுமார் 15.3 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
பிரச்னைகளின் தீவிரத்தின் அடிப்படையில், உலக நாடுகளைப் பல்வேறு வகைகளாகப் பிரித்துள்ளது `உலகப் பட்டினி குறியீடு 2021’ அறிக்கை. குறைந்த அபாயம், மிதமான அபாயம், கடுமையான அபாயம், முற்றிலும் அபாயம் ஆகிய நிலைகளின் அடிப்படையில் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு, நாடுகள் அதில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன.
முன்னணி இடங்களைப் பிடித்த 18 நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டிலும், 2020ஆம் ஆண்டிலும் இந்தியா கடுமையான அபாய நிலைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
அபாய நிலைகளில் இருக்கும் நாடுகளாக மடாகாஸ்கர், காங்கோ ஜனநாயகக் குடியரசு, சாட், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, யெமன், புருண்டி, கொமொரொஸ், தெற்கு சூடான், சிரியன் அரபு குடியரசு ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
முற்றிலும் அபாயகர நிலையில் இருக்கும் நாடுகளில் சோமாலியா மட்டுமே இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான பட்டியலில் மிக மோசமான நாடாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் அதிகளவில் குழந்தைகள் உயரத்திற்கேற்ற எடையின்மை காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால், அந்தப் பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருந்தது.
`உலகப் பட்டினிக் குறியீடு 2021’ பட்டியலில் இந்தியாவை விட முன்னணி இடங்களைப் பிடித்துள்ளது அண்டை நாடுகள். பாகிஸ்தான் 92வது இடத்தையும், நேபாளம் 76வது இடத்தையும், வங்காளதேசம் 76வது இடத்தையும் பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் பெற்றுள்ளன.
இந்தியாவை விட குறைவாகச் செயலாற்றிய நாடுகளின் எண்ணிக்கை 15 ஆக இந்த ஆண்டில் காணப்படுகிறது. பபுவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான், நைஜீரியா, காங்கோ, மொசாம்பிக், சியர்ரா லியோன், டிமோர் லெஸ்தே, ஹைதி, லைபீரியா, மடகாஸ்கர், காங்கோ ஜனநாயகக் குடியரசு, சாட், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, யெமன், சோமாலியா ஆகிய நாடுகளுக்கு இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்த இடங்கள் கிடைத்துள்ளது.
இந்த அறிக்கையில், 2030ஆம் ஆண்டுக்குள் பட்டினியே இல்லாத நிலையை உருவாக்குவதை எந்த நாடும் செயல்படுத்த முடியாத அபாயகரமான சூழல் நிலவுவதாகக் கூறப்பட்டுள்ளது. `2021 உலகப் பட்டினிக் குறியீடு பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வரும் உலகின் பட்டினிப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான குறியீட்டை வழங்கி வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் பட்டினியே இல்லாத நிலையை உருவாக்கும் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுவதோடு, தேங்கி நிற்பதையும், சில சமயங்களில் எதிர்மறையாக செயல்படும் அறிவிப்புகளையும் வெளிப்படுத்துகின்றன’ என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் உலகம் முழுவதும் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )