India Corona Cases Today: இந்தியாவின் இன்றைய கொரோனா பாதிப்பு குறைந்தது: இருப்பினும் 2.59 லட்சம் பேர் பாதிப்பு
இந்திய அளவிலான இன்றைய நாளின் கொரோனா பாதிப்பு நேற்றைய நாளை விட குறைந்துள்ளது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.59 லட்சமாக உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 2.61 லட்சம், நேற்று 2.70 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 2.59 லட்சமாக குறைந்தது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919 - இல் இருந்து ஒரு கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்து 89- ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 769-ல் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 530-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 761 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்து 821-இல் இருந்து ஒரு கோடியே 31 லட்சத்து 8 ஆயிரத்து 582 ஆக உள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 86 சதவீதம் மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.19 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 லட்சத்து 31 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 648 பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 12 கோடியே 71 லட்சத்து 29 ஆயிரத்து 113 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
ஊரடங்கில் மீண்டும் கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதாக புகார் எழுந்த நிலையில் அதன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
கொரோனாவின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அது நேற்றைய நாளுடன் தான் ஒப்பிடப்படுகிறது. அந்த எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் இருப்பதால், தீவிர நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.