I.N.D.I.A Bloc Meeting: I.N.D.I.A கூட்டணியில் இன்று 4வது ஆலோசனைக் கூட்டம் - காங்கிரஸ் நிலை என்ன? தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு?
I.N.D.I.A Bloc Meeting: எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A கூட்டணியின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
I.N.D.I.A Bloc Meeting: எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A கூட்டணியின் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
I.N.D.I.A கூட்டணி:
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கின. இந்த கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்கனவே பீகார், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்பட்டன. இதையடுத்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால், கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், டெல்லியில் இன்று I.N.D.I.A கூட்டணியின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த 6ம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த ஆலோசனைக் கூட்டம், பல்வேறு தலைவர்களின் வலியுறுத்தலின் பேரில் இன்றைய தேதிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம்:
டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர். அதன்படி, ஸ்டாலின், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்ரே, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வ் யாதவ் போன்ற பல தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர். eஎற்கனவே ஒப்புதல் வழங்கிய பணியால் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க முடியாது என ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் பங்கேற்பும் இதுவரை உறுதியாகவில்லை. காங்கிரஸ் சார்பில் மல்லிகர்ஜுனா கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தின் நோக்கம் என்ன?
5 மாநில தேர்தல் முடிவில் பாஜக மூன்று மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற, காங்கிரஸ் தெலங்கானாவில் மட்டுமே ஆட்சியை கைப்பற்றியது. இந்த சூழலில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதிப் பங்கீடு, ஒருங்கிணைந்த பரப்புரை திட்டம், சமீபத்திய சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பாஜகவை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த வியூகத்தை மறுவடிவமைப்பது போன்ற பல்வேறு விவாகாரங்கள் தொடர்பாக தீர்க்கமாக விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் முடிவில் சில முக்கிய முடிவுகளும் எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் நிலைமை என்ன?
கடைசியாக நடைபெற்ற இரண்டு கூட்டங்களிலும், காங்கிரஸ் கட்சியே கூட்டணிக்கு தலைமை என்பது போன்ற தோற்றம் இருந்தது. ஆனால், 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால், கூட்டணியில் காங்கிரஸ்ன் கை ஓங்குமா என்பது சந்தேகமே. இதனிடையே, ”மூன்று மாநிலங்களில் தோல்வியடைந்த காங்கிரஸ், அதிலிருந்து பாடம் கற்க வேண்டும். அக்கட்சி ஜமீன்தாரி கலாச்சாரத்தை புறக்கணிக்க வேண்டும். கூட்டாளர்களை தனது குடிமக்களாகக் கருத முடியாது. இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதை உறுதி செய்ய, மூன்று முறை முதல்வராகவும், மூன்று முறை மத்திய அமைச்சராகவும் உள்ள மம்தா பானர்ஜியை இந்திய கூட்டணியின் முகமாக மாற்ற வேண்டும்" என திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார். அதேநேரம், ”2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யப்படும்” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் தொடரும் சிக்கல்கள்:
I.N.D.I.A கூட்டணி வலுவாக இருப்பதாக அதன் தலைவர்கள் இருந்தாலும், ஏராளமான பிரச்னைகள் வெளிப்படையாகவே தெரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று வரை இந்த கூட்டணிக்கான பிரதிநிதியை நியமிக்கவில்லை. பஞ்சாபில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே ஒருமித்த கருத்து ஏற்படுவதில் சிக்கல் நிலை நீடிக்கிறது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இடையேயும் இதே நிலை தான் நீடிக்கிறது. அதோடு, அகிலேஷ் யாதவ் மற்றும் நிதீஷ் குமாருக்கும் இந்த கூட்டணி செயல்பாட்டில் சில அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.