CM MK Stalin:"முதல்வர் மருந்தகம் திட்டம், ஓய்வூதியம் உயர்வு" சுதந்திர தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி..
பொங்கல் முதல் முதல்வர் மருந்தகம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டி காணப்படுகிறது. சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தேசிய கொடி ஏற்றிய பிறகு தமிழக மக்களுக்காக முதலமைச்சர் சுதந்திர தின உரையாற்றினார். அதில் அவர் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது,
3 ஆண்டுகளில் வளர்ச்சி:
“கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. சமூகத்திற்காகவும், குடும்பத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்குகிறோம். காலை உணவுத் திட்டத்தால் 20.73 லட்சம் மாணவர்கள் தினமும் சூடான, சுவையான உணவு சாப்பிடுகின்றனர். தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதை ஒன்றிய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கோவையில் வ.உ.சி.க்கு சிலை, கடலூரில் அஞ்சலை அம்மாளுக்கும், நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கத்துக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்களால் உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. 3 ஆண்டுகளில் 65 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி கிடைத்துள்ளது.
முதல்வர் மருந்தகம்:
பரந்தூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க உள்ளோம். குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி தொழில்பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது. முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும். பொங்கல் திருநாள் முதல் முதல்வர் மருந்தகம் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்வர் மருந்தகம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட ரூபாய் 3 லட்சம் மானியம் வழங்கப்படும். முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திட அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகம்.
ஓய்வூதியம் உயர்வு:
முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திட அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகம். விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூபாய் 20 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். கட்டபொம்மன், மருது சகோதரர்கள், ராமநாதபுரம் மன்னர் விஜயரகுநாத சேதுபதி, வ.உ.சி. வழித்தோன்றல்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 10 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படுகிறது.
விடுதலை போராட்ட வீரர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 11 ஆயிரத்தில் இந்து ரூபாய் 11 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படுகிறது. நீலகிரி, வால்பாறையில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் விரிவான ஆய்வு நடத்தப்படும்.”
இவ்வாறு அவர் பேசினார்.