Independence Day 2023: மருதநாயகம் முதல் மருது சகோதரர்கள் வரை.. ஆங்கிலேயர்களை நடுங்க வைத்த தமிழ்நாட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள்
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, 77ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், போதுமான அங்கீகாரம் வழங்கப்படாத தமிழ்நாட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்கிறது ஏபிபி நாடு.
தமிழ்நாட்டுக்கு என நீண்ட, பெருமை வாய்ந்த வரலாறு உள்ளது. நாட்டிலேயே மிகவும் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். இருப்பினும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் முத்திரையைப் பதித்தும், அதிகம் அறியப்படாத தமிழ் விடுதலைப் போராளிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு போதுமான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. வரலாற்று ஆவணங்களில் கூட அவர்களை பற்றிய போதுமான அளவு குறிப்பிடப்படவில்லை. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, 77ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், போதுமான அங்கீகாரம் வழங்கப்படாத தமிழ்நாட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்கிறது ஏபிபி நாடு.
வேலு நாச்சியார்:
ராணி வேலு நாச்சியார் 18ஆம் நூற்றாண்டில் சிவகங்கை அரசியாக இருந்தவர். போரின்போது ஆயுதத்தை எப்படி பயன்படுத்துவது, தற்காப்பு கலைகள், பல்வேறு போர் முறைகளில் பயிற்சி பெற்றவராக திகழ்ந்தார். இவரது கணவர், ஆங்கிலேயர்களுடன் போரிடும்போது கொல்லப்பட்டார். அப்போதுதான், போர்க்களத்தில் நேரடியாக களம் இறங்கினார் வேலு நாச்சியார்.
ஹைதர் அலி, தலித் சமூகத்தை சேர்ந்த தளபதிகள், நிலப்பிரபுக்களின் ஆதரவுடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக துணிச்சலாகப் போராடிய இந்தியாவின் தலைசிறந்த பெண் சுதந்திரப் போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர் . இந்திய வரலாற்றில் இவரை போதுமான அளவுக்கு ஆவணப்படுத்தவில்லை என வரலாற்றாசிரியர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இருப்பினும், தமிழ்நாட்டின் வரலாற்றில் இவருக்கு என தனத்துவமான இடம் வழங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழர்கள் இவரை வீரமங்கை என்று குறிப்பிடுகின்றனர்.
மருது சகோதரர்கள்:
சுதந்திர போராட்ட வரலாற்றில் மகத்தான பங்களிப்பு ஆற்றிய போதிலும், மருது பாண்டியர் சகோதரர்களான வல்ல மருது மற்றும் அவரது இளைய சகோதரர் சின்ன மருது ஆகியோர் இந்திய அளவில் அறியப்படாமல் உள்ளனர். இவர்கள் சிவகங்கை முத்து வடுகரின் தளபதிகள் ஆவர்.
காளையார் கோவில் போரில் சிவகங்கையின் ஆட்சியாளர் கொல்லப்பட்ட பிறகு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணைக்கு கொண்டு வர இந்த இரண்டு சகோதரர்களும் உதவினார்கள். கூடுதலாக, அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக கடும் போரை நடத்தினர். ஆங்கிலேய துருப்புக்களை துரத்தி அடித்தனர்.
ஆரம்ப காலனித்துவ காலத்தில் இந்தியாவில் கொரில்லா போர்முறையை நிறுவிய பெருமை, மருது சகோதரர்களை சேரும். சிவகங்கை சீமை என்ற பெயரில், இவர்களை போற்றும் வகையில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. மேலும், இந்திய அரசு இவர்களை கௌரவிக்கும் வகையில் தபால் தலையையும் வெளியிட்டது. மலேசியாவின் கெடாவில் இவர்களுக்கு என ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மன்:
262 ஆண்டுகளுக்கு முன், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றியவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியில 1760 ஜனவரி 3ஆம் தேதி ஜெகவீரன் - ஆறுமுகத்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
சுதந்திரப் போராட்டம் என்றாலே நினைவுக்கு வரும் முதல் பெயர் வீரபாண்டிய கட்டபொம்மன்தான். மதராஸ் மாகாணத்தில் கால்பதித்த ஆங்கிலேயர்கள், தென்னிந்திய பரப்பு முழுவதையும் ஆட்கொள்ளத் துடித்தபோது இந்த மண்ணுக்கு அரணாக நின்று துணிச்சலாக எதிர்த்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் கொடுத்த துணிவால் தென்னிந்தியாவை நிர்வகித்த பல பாளையக்காரர்களும் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள். அதனால் வெள்ளையர்களின் இலக்கானார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
கட்டபொம்மன் மரபுக்கு என மிக நீண்ட வரலாறு உண்டு. இப்போது ஒட்டப்பிடாரம் என அழைக்கப்படும் அழகிய வீரபாண்டியபுரத்தை ஆண்ட ஜெகவீரபாண்டிய நாயக்கரின் அரசவையில் கெட்டிப்பொம்மு என்பவர் இடம்பெற்றிருந்தார். ஜெகவீர பாண்டியனின் நம்பிக்கையைப் பெற்ற கெட்டிபொம்மு ஜெகவீரபாண்டியனுக்குப் பிறகு மன்னராக நியமிக்கப்பட்டார். அவர் மரபில் வந்தவர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
பூலித்தேவன்:
இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் முன்னோடியாக கருதப்படுகிறார் பூலித்தேவன். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு' என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
அழகு முத்துக்கோன்:
இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857ஆம் ஆண்டு நடந்ததாக வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் விடுதலை போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன்.
தீரன் சின்னமலை:
தீர்த்தகிரி என்ற இயற்பெயர் கொண்ட தீரன் சின்னமலை, ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதியில் 1756 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தார். இளமையிலேயே பல்வேறு வித்தைப் பயிற்சிகளை இளைஞர் படைகளோடு உருவாக்கி வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தான் ஆகியோரோடு சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டு பல்வேறு போர்களில் வெற்றிவாகை சூடியவர்.
தீரன் சின்னமலை இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து இளம் வீரராக உருவெடுத்தார். பல தற்காப்புக் கலைகள் அறிந்திருந்தாலும் அவர் அக்கலைகளைத் தன் நண்பர்களுக்கும் கற்று கொடுத்து சிறந்த போர்ப்பயிற்சி அளித்து அவரது தலைமையில் இளம் வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார். இவரின், பிறந்த ஊர் கொங்குநாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், வரிப்பணம் அவரது அண்டை நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும்.
ஒருநாள் தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் சொல்" என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல் அவர் தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டார்.
மருதநாயகம்:
முஹம்மது யூசுப் கான் என்று அழைக்கப்படும் மருதநாயகம், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போராடிய 18ஆம் நூற்றாண்டின் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக் கொள்கைகளிலிருந்து தம்முடைய மக்களின் விடுதலைக்காகப் போராடிய ஒரு போர்வீரன்.
உடன் இருந்தவர்களின் துரோகச் செயலால் யூசுப் கான், எதிரிகளின் பிடியில் சிக்கிக்கொண்டார். அதன் பின் மதுரைக் கோட்டைக்குத் தெற்கே உள்ள ஒரு மாமரத்தில் மருதநாயகம் எனப்படும் யூசுப் கான் தூக்கிலிடப்பட்டார். இருமுறை கயிறு அவிழ்ந்தது, மூன்றாவது முறை மருதநாயகத்தின் உயிரை இழுத்துக்கொண்டது.
இறந்த பின்பு யூசுப் கான் மதுரை மக்களின் முக்கியச் சின்னமாக மாறி விடுவார் என்பதை எண்ணி, யூசுப் கான் தலையை திருச்சிக்கும், கால்களைத் தஞ்சாவூருக்கும் திருவிதாங்கூருக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும் எதிரிகள் அனுப்பிவிட்டனர். உடலை மட்டும் இறந்த இடத்திலேயே புதைத்துவிட்டனர்.
யூசுப் கான் புதைக்கப்பட்ட இடத்தில் ஷேக் இமாம் என்பவர் தர்கா ஒன்றை எழுப்பினார். அது சாஹிப் பள்ளி வாசல் என்று அறியப்படுகிறது. இதைத்தான் கமல்ஹாசன் படமாக எடுக்க விரும்பினார்.