பாம்புகளுக்காகவே வீட்டில் தனி பொந்து! சாதாரணமாக வந்து போகும் நாகப்பாம்புகள்! விநோத கிராமம்!
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்பு என்றால் கிராம மக்கள் அனைவரும் பயமின்றி ஏதோ செல்லப்பிராணி போல் கொண்டாடுகின்றனர்.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்பு என்றால் கிராம மக்கள் அனைவரும் பயமின்றி ஏதோ செல்லப்பிராணி போல் கொண்டாடுகின்றனர். அதுவும் ஏதோ தண்ணீர் பாம்பு என நினைத்துவிடாதீர்கள். அவை அனைத்துமே நாகப்பாம்புகள்.
விநோத கிராமம்:
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது சேத்பல் என்ற கிராமம். இது மோஹோல் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமம். இந்த கிராமத்தில் தான் மக்களும் பாம்புகளும் ஒன்றாக வாழும் சூழல் உள்ளது. இந்த கிராமத்தில் 2600 பேர் வசிக்கின்றனர். இவர்களில் குடுகுடு கிழவனார் முதல் பள்ளிச் சிறுமிவரை யாருக்குமே பாம்பைக் கண்டு அச்சமில்லை. அதுமட்டுமல்ல இந்த ஊரில் உள்ள மக்கள் யாரையும் இதுவரை பாம்பு தீண்டியதில்லை. பாம்புகள் என்றால் எனக்குப் பிடிக்கும் என்று சொல்லும் யார் வேண்டுமானாலும் தங்கள் கிராமத்துக்கு வரலாம் என்று இந்த கிராமவாசிகள் வரவேற்கின்றனர்.
இந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலுமேயே பாம்புகள் சர்வசாதாரணமாக வந்து செல்கின்றன. அதை யாரும் துரத்துவதும் இல்லை அடிப்பதும் இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் பாம்புகளுக்கு என்று தனியாக பொந்துகள் உள்ளன. புதிதாக வீடு கட்டுபவர்களும் பாம்புக்காக ஒரு பொந்து கட்டுகின்றனர். பாம்புக்கு பால், முட்டை ஆகியனவும் வைக்கின்றனர். வீட்டில் பாம்புக்கு என்று இருக்கும் இடத்தை தேவஸ்தானம் என்று அவர்கள் அழைக்கின்றனர்.
விளையாடும் குழந்தைகள்:
கொடிய விஷம் கொண்ட இந்த பாம்புகளைக் கண்டு சிறு குழந்தைகள் கூட அஞ்சுவதில்லை. பிறந்ததில் இருந்தே பாம்புகளுடன் வளரும் அவர்களுக்கு அச்சம் என்பதே ஏற்படுவதில்லை என கிராம பெரியவர்கள் கூறுகின்றனர். ஆண்டுதோறும், இந்த கிராமத்தில் நாகபஞ்சமி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
பாம்புகளால் பால் குடிக்க முடியுமா?
பாம்புகள் பால் குடிப்பதில்லை என்று விஞ்ஞானம் கூறுகின்றது. ஆனால் பாம்புகள் தாகமாக இருக்கும்போது தண்ணீருக்குப் பதில் பால் இருந்தால் பாலை தாகத்துக்காக சிறிதளவு குடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பாம்புகளால் சுவரில் ஏற முடியாது. ஆனால் சுவரை ஒட்டி அதன் உடலைத் தாங்கும் வசதி இருந்தால் அதைப் பயன்படுத்திப் பாம்புகள் சுவர் மீது ஏறி விடும். தேவைப்பட்டால் மிக உயரமான சுவரின் மீதிருந்து கீழே தாவிக் குதித்து விடவும் பாம்பினால் முடியும்.
இதைத் தடுக்க சுவரை ஒட்டியுள்ள மரம், சுவர் மீது சாய்ந்துள்ள குச்சி போன்ற, பாம்பு சுவர் மீது ஏறத் தேவைப்படும் வசதிகளை அகற்றி விட வேண்டும். அத்துடன் வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் புழு, பூச்சிகள், பல்லி, தவளை, எலி போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.