UP Encountres: யோகி ஆதித்யநாத் 6 ஆண்டுகள் ஆட்சி... 10 ஆயிரம் என்கவுண்டர்கள்..! என்ன நடக்குது உ.பியில்?
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் உத்தரபிரதேசத்தில் ஆட்சி செய்து வரும் யோகி ஆதித்யநாத் கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் அம்மாநில தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தார்.
என்கவுண்டர்கள்:
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட என்கவுண்டர் சம்பவங்கள் தொடர்பாக உத்தரபிரதேச அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த 2017ம் ஆண்டு முதல் அந்த மாநிலத்தில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் குற்றவாளிகள் மீது போலீசாரால் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் நடத்தப்பட்ட இந்த என்கவுண்டர்கள் பட்டியலில் மொத்தம் 63 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்திலே அதிகளவில் என்கவுண்டர்கள் செய்யப்பட்ட நகரமாக மீரட் உள்ளது. 2017ம் ஆண்டு முதல் மீரட்டில் மட்டும் 3152 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட என்கவுண்டர் முயற்சியில் மொத்தம் 1708 குற்றவாளிகள் காயம் அடைந்துள்ளனர்.
மீரட், ஆக்ரா, ரேபரெலி:
இந்த என்கவுண்டர் சம்பவத்தில் மொத்தம் 401 காவல்துறையினர் காயம் அடைந்ததாகவும், ஒரு போலீசார் வீரமரணம் அடைந்ததாகவும் உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் 2017ம் ஆண்டு முதல் மொத்தம் நிகழ்த்தப்பட்ட 10 ஆயிரத்து 713 என்கவுண்டரில் மீரட் நகருக்கு அடுத்தபடியாக ஆக்ரா காவல்துறையினர் 1844 என்கவுண்டர் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளனர்.
ஆக்ராவில் 4 ஆயிரத்து 654 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 55 காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். பேரெலியில் நிகழ்த்தப்பட்ட 1497 என்கவுண்டர் சம்பவங்களில், 3410 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 437 குற்றவாளிகள் காயம் அடைந்தனர். இதில், 296 காவல்துறையினர் காயம் அடைந்த நிலையில், ஒரு போலீசார் வீரமரணம் அடைந்தார்.
10 ஆயிரம் என்கவுண்டர்கள்:
உத்தரபிரதேச மாநில அரசு எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவ்வப்போது கூறி வருகின்றன. உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குற்றச்சம்பவங்கள் ஏராளமாக நிகழ்ந்து வருவதாக அடிக்கடி செய்திகளும் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் 6 ஆண்டுகால ஆட்சியில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-ல் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பிற மூத்த தலைவர்கள் உத்தரபிரதேசத்தின் சட்டம் ஒழுங்கை பாராட்டினர். தற்போது அவர்களது பாராட்டையும், இந்த என்கவுண்டர் முயற்சியையும் ஒப்பிட்டு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: South Korea Marriages : வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைவான திருமணங்கள்...சிக்கி தவிக்கும் தென்கொரியா..!
மேலும் படிக்க: Covid : தொடர் அச்சம்...மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு... தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!