Air Force Day 2022 : இந்திய விமானப்படைக்கு புதிய போர் சீருடை… இந்திய விமானப்படை தினமான இன்று புதிய அறிவிப்பு..
"இந்நிகழ்ச்சியில், விமானப்படை வீரர்களுக்கான புதிய போர் சீருடையை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதாரி வெளியிடுவார்"
இந்திய விமானப்படை தினம் பல விமான அணிவகுப்புகளுடன் கொண்டாடப்படும் இன்று இந்திய விமானப்படை போர்வீரர்களுக்கு புதிய போர் சீருடை அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது.
இந்திய விமானப்படை தினம்
இந்திய விமானப்படை உலகின் மிகப்பெரிய விமானப்படைகளில் தரவரிசையில் முக்கியமான இடத்தில் உள்ளது. இந்த இடத்தை பிடிக்க உதவிய விமானப்படை வீரர்கள் மற்றும் சாகச செயல்கள் போற்றப்படுகின்றன. இது 1932 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ராயல் விமானப்படையின் துணைப் படையாக இந்திய விமானப்படை உயர்த்தப்பட்ட தேதியான அக்டோபர் 8 ஆம் தேதியாக இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய விமானப்படை சிறியதாகத் தொடங்கினாலும், காலப்போக்கில் வலிமையான ஒன்றாக மாற்றிக்காட்டினர் இந்திய விமானப் படை வீரர்கள். இந்த நாள், நாட்டிற்கு உதவிய விமானப்படையின் மைல்கல் பணிகளையும், இந்தத் துறையில் இந்தியா வெளிப்படுத்திய சிறப்பையும் அங்கீகரிக்கிறது. இன்றைய கொண்டாட்டங்களில் வழக்கம் போல ஹிண்டன் விமானப்படை தளத்தில் விமானப் போர்வீரர்களைக் காட்டும் அணிவகுப்பு இடம்பெறும்.
புதிய போர் சீருடை
இந்த ஆண்டு, சண்டிகரில் சுமார் 80 விமானங்களுடன் பறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. "இங்குள்ள விமானப்படை நிலையத்தில் காலையில் அணிவகுப்பு நடைபெறும். இந்நிகழ்ச்சியில், விமானப்படை வீரர்களுக்கான புதிய போர் சீருடையை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதாரி வெளியிடுவார். எங்களிடம் ஏற்கனவே போர் சீருடை உள்ளது, ஆனால் டிஜிட்டல் உருமறைப்பு எனப்படும் முறைக்கு இந்த சீருடை மாற்றப்படும்" என்று இந்திய விமானப்படை (IAF) அதிகாரி ஒருவர் சண்டிகரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
விமான அணிவகுப்பில் பங்குகொள்பவை எவை?
ஏறக்குறைய 80 ஹெலிகாப்டர்கள் மற்றும் போக்குவரத்து விமானங்கள் சனிக்கிழமை பிற்பகல் இங்கு சுக்னா ஏரியின் மீது பறக்கும் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் என்று அந்த அதிகாரி கூறினார். இருப்பினும், Chetak மற்றும் Cheetah ஹெலிகாப்டர்கள் மற்றும் போக்குவரத்து விமானங்கள் Avro மற்றும் Dornier ஆகியவை இதில் இடம்பெறாது என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட லைட் காம்பாட் ஹெலிகாப்டர் 'பிரசந்த்' மூன்று விமான அமைப்பில் பறக்கும் பாதையின் ஒரு பகுதியாக இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செகோன் அணிவகுப்பு
மற்றொரு அணிவகுப்பு செகோன் ஆகும், இது IAF அதிகாரி மற்றும் பரம் வீர் சக்ரா விருது பெற்ற நிர்மல்ஜித் சிங் செகோனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த அணிவகுப்பில் ரஃபேல், தேஜாஸ், ஜாகுவார் மற்றும் மிராஜ் 2000 ஆகியவை இடம்பெறுகின்றன. குளோப் அமைப்பில் ஒரு சி-17 ஹெவி-லிஃப்ட் விமானம் மற்றும் ஒன்பது ஹாக்-132 சூர்யா கிரண் டிஸ்ப்ளே டீம் ஆகியவை இடம்பெறுகின்றன என்று அதிகாரி கூறினார். நான்கு அப்பாச்சி ஹெலிகாப்டர்களுடன் Mi-35 தாக்குதல் ஹெலிகாப்டர், பிக் பாய் உருவாக்கத்தில் ஒரு IL-76 மற்றும் இரண்டு AN-32 விமானங்கள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.