”மாட்டிறைச்சியை பாஜக என்றைக்குமே எதிர்த்ததில்லை”: பாஜக தலைவர் பேச்சு
நான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன், நான் பாஜகவில் இருக்கிறேன், இதில் எந்த பிரச்சனையும் இல்லை.
மேகாலயா பாஜக மாநிலத் தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி அண்மையில் ஒரு கூட்டத்தில், ”மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு பாரதிய ஜனதா கட்சி எந்த தடையும் விதிக்கவில்லை ”என்றும், அவர் மாட்டிறைச்சி சாப்பிடுவதாகவும், அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேகாலயா தேர்தல் விரைவில் நிகழ இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எந்த தேவாலயத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தனது கட்சி எந்த தடையும் விதிக்கவில்லை என்றும் மாவ்ரி கூறினார்.
"நான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன், நான் பாஜகவில் இருக்கிறேன், இதில் எந்த பிரச்சனையும் இல்லை. மேகாலயா மக்கள் இந்த முறை பாஜகவுடன் இருக்கிறார்கள் என்று உறுதியளிக்கிறேன். அதை மார்ச் 2ல் பார்க்கலாம்,'' என்றார் அவர்.
மேகாலயாவின் மக்கள் கிறிஸ்தவ மதத்தை அதிகமாகப் பின்பற்றுபவர்கள், மாட்டிறைச்சி தடை, சிஏஏ மற்றும் பிற பிரச்சினைகளில் பாஜகவின் கடுமையான நிலைப்பாட்டை ஏற்கத் தயாராக உள்ளனர் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் குறிப்பிட்டார்.
மேலும் வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் மார்வி தனது பேட்டியில் தெரிவித்தார்.
”இந்த முறை மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். நாங்கள் ஒரு நல்ல முடிவை இதனால் எதிர்பார்க்கிறோம், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஊழலில் பங்கேற்காத கட்சிகளுடன் இணைவதைப் பற்றி முடிவெடுப்போம் ”என்று அவர் கூறினார்.
கடந்த ஐந்தாண்டுகளில் தேசிய மக்கள் கட்சி செய்த பெரிய அளவிலான ஊழலைச் சுட்டிக்காட்டிய மார்வி தங்களது கட்சி ஊழலை என்றைக்குமே சகித்துக்கொள்ளாது என்று குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த ஓராண்டில் நாங்கள் தாக்கல் செய்த RTI விண்ணப்பங்கள் மூலம், தற்போதைய ஆட்சியின் கீழ் மேகாலயாவில் எவ்வளவு பெரிய ஊழல் நடக்கிறது என்பதை நாங்கள் பார்த்தோம். எங்களிடம் அனைத்து அதற்கான அனைத்து ஆதாரங்களும் தற்போது உள்ளன," என்றார் அவர்.
2023 பிப்ரவரி 27 அன்று மேகாலயா சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 60 சட்டமன்றங்களுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.தேர்தலுக்கான முடிவுகள் 2 மார்ச்சில் வெளியாகும்.
அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த தேர்தல் பிரசாரக் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசார பேரணி அங்குள்ள விளையாட்டு அரங்கில் நிகழ்வதாக இருந்த நிலையில் அதற்கான அனுமதியை அந்த மாநில அரசு மறுத்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆளும் தேசிய மக்கள் கட்சிக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.