கூட்டுப் பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் பெர்ஃப்யூம் விளம்பரம்... யூடியூப், ட்விட்டருக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
நெட்டிசன்களின் கடும் கண்டனங்களை அடுத்து இந்த விளம்பரத்தை ட்விட்டர், யூட்யூப் தளங்களில் இருந்து நீக்குமாறு மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பெர்ஃப்யூம் வாசனை திரவிய நிறுவனம் ஒன்றின் சமீபத்திய விளம்பரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் முன்னதாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் நெட்டிசன்களின் கண்டனங்களை அடுத்து இந்த விளம்பரத்தை ட்விட்டர், யூட்யூப் தளங்களில் இருந்து நீக்குமாறு மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
View this post on Instagram
மகளிர் ஆணையம் கண்டனம்
Layers shot எனும் வாசனை திரவிய நிறுவனத்தின் இந்த விளம்பரத்துக்கு எதிராக முன்னதாகப் பதிவிட்ட டெல்லி மகளிர் ஆணையத் தலைவர், ”இந்த விளம்பரம் அச்சமுட்டூம் வகையில் உள்ளது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை கலாச்சாரத்தை இவர்கள் தெளிவாக ஊக்குவிக்கிறார்கள். நிறுவன உரிமையாளர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதுகுறித்து டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, எஃப்ஐஆர் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி I&B அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.
தவறான, இழிவான விளம்பரம்...
இந்நிலையில் இது குறித்துப் பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர், ”தவறான, இழிவான இந்த விளம்பரம் எங்களது கவனத்துக்கு வந்துள்ளது. இந்த விளம்பரத்தை ட்விட்டர், யூடியூப் தளங்களில் இருந்தும் உடனடியாக நீக்குமாறு ஏற்கெனவே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
It has come to notice of @MIB_India that an inappropriate and derogatory advertisement of a deodorant is circulating on social media. Ministry has asked Twitter and YouTube to immediately pull down all instances of this advertisement.
— PIB India (@PIB_India) June 4, 2022
1/2 pic.twitter.com/IWuqyhJEmw
மேலும் இது குறித்து அமைச்சகம், ட்விட்டர் மற்றும் யூடியூப்பிற்கு எழுதியுள்ள கடிதங்களில், இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சிலும் (ASCI) அதன் வழிகாட்டுதல்களை இந்த விளம்பரம் மீறுவதாகக் கண்டறிந்துள்ளது எனவும், விளம்பரத்தை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு இந்திய விளம்பர தர நிர்ணயம் விளம்பரதாரரிடம் கேட்டுக் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.