Idly in Swiggy: அடேங்கப்பா.. 6 லட்சத்துக்கு ஸ்விக்கியில் இட்லி ஆர்டர்...! இட்லி வெறியரா இருப்பரோ..?
ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி செயலியில் ஒரு ஆண்டில் ஐதராபாத்தை சேர்ந்த நபர், சில லட்சங்களுக்கு இட்லியை ஆர்டர் செய்து பெற்றுள்ளார்.
ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி செயலியில் ஒரு ஆண்டில் ஐதராபாத்தை சேர்ந்த நபர், சில லட்சங்களுக்கு இட்லியை ஆர்டர் செய்து பெற்றுள்ளார். இதுதொடர்பான தகவலின் படி, குறிப்பிட்ட நபர் கடந்த ஒரு ஆண்டில் 6 லட்ச ரூபாய்க்கு இட்லியை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
ரூ.6 லட்சத்திற்கு இட்லி:
பரபரப்பான உலகத்தில் சமைப்பதற்கு கூட நேரமில்லாமல் ஓடும் மக்களுக்கு கிடைத்த, வரப்பிரசாதம் தான் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் செயலிகள். 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில், உணவு டெலிவரி செய்யும் செயலிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த துறையில் முன்னணியில் உள்ள ஸ்விக்கி நிறுவனம் கடந்த ஆண்டு, தங்களிடம் அதிக தொகைக்கு இட்லியை ஆர்டர் செய்து பெற்ற வாடிக்கையாளர் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நபர் கடந்த ஒரு ஆண்டில் மட்டும், தென்னிந்தியாவின் முக்கிய உணவுகளில் ஒன்றான இட்லியை ரூ.6 லட்சத்திற்கு ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். தனக்கு மட்டுமின்றி குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக என ஐதராபாத் மட்டுமின்றி, சென்னை போன்ற நகரங்களுக்கு பயணம் செய்தபோதும் கூட மொத்தமாக 8,428 பிளேட் இட்லியை அந்த வாடிக்கையாளர் ஆர்டர் செய்துள்ளார்.
இட்லி தின கொண்டாட்டம்:
மார்ச் 30ம் தேதி இட்லி தினமாக கொண்டாடப்படுவதையொட்டி, ஸ்விக்கி நிறுவனத்தால் டெலிவரி செய்யப்பட்ட இட்லி ஆர்டர் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் 30ம் தேதி தொடங்கி, கடந்த மார்ச் 25ம் தேதி வரையிலான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள தரவுகள் இட்லி எந்த அளவிற்கு பிரபலமாக உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை அறிய உதவுகின்றன.
33 மில்லியன் இட்லி ஆர்டர்:
ஸ்விக்கி நிறுவனம் குறிப்பிட்ட ஒரு ஆண்டு காலத்தில் 33 மில்லியன் அதாவது 3.3 கோடி பிளேட் இட்லி டெலிவரி செய்துள்ளது. பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் இட்லியை ஆர்டர் செய்வதில் முன்னிலை வகித்து வருகின்றன. அவற்றை தொடர்ந்து, மும்பை, கோயம்புத்தூர், புனே, விசாகப்பட்டினம், டெல்லி, கொல்கத்தா மற்றும் கொச்சியில் இட்லி அதிகளவில் ஆர்டர் செய்யப்படுகிறது.
எந்த இட்லிக்கு மவுசு?
காலை 8 மணி முதல் 10 மணி வரையில் தான் அதிகளவில் இட்லி ஆர்டர் செய்யப்படுகிறது. இரவு உணவுக்காக தான் அதிக இட்லி ஆர்டர் செய்யப்படுகிறது. பிளெயின் இட்லி அனைத்து நகரங்களிலும் அதிகளவில் ஆர்டர் செய்யப்படுகிறது. பெங்களூருவில் ரவா இட்லி, நெய் மற்றும் காரப்பொடி இட்லி தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் அதிகளவில் விற்பனையாகிறது. மசாலா தோசைக்கு அடுத்தபடியாக தங்களது செயலியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட காலை உணவு, இட்லி தான் என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.