Amit Shah: ”ராமேஸ்வரம் வரேன்..ஒவ்வொரு தொகுதிக்கும்..” தமிழில் உள்துறை அமைச்சர் அமித் ஷா டிவீட்..
அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கி வைப்பதற்காக ராமேஸ்வரம் வருவதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் டிவீட் செய்துள்ளார்.
அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கி வைப்பதற்காக ராமேஸ்வரம் வருவதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் டிவீட் செய்துள்ளார்.
அமித் ஷா தமிழ் டிவீட்:
பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் பாதயாத்திரையை தொடங்கி வைப்பதற்காக, அக்கட்சியின் மூத்த தலைவர் அமித் ஷா இன்று மாலை தமிழகம் வருகிறார். இதுதொடர்பாக தமிழில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் செல்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்வைத்த மாற்றத்தினை மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழக பாஜக நடத்தும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் செல்கிறேன். பிரதமர் திரு. @narendramodi அவர்கள் முன்வைத்த மாற்றத்தினை மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் எடுத்துச் செல்லும் வகையில் @BJP4Tamilnadu நடத்தும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறேன்.#EnMannEnMakkal
— Amit Shah (@AmitShah) July 28, 2023
அமித் ஷா தொடங்கி வைக்கிறார்:
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவின் சாதனையை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரத்தில் தொங்கி வைக்கிறார். இதற்காக அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 4 மணி அளவில் தமிழ்நாடு வருகை தருகிறார்.
அண்ணாமலையின் பாதயாத்திரை:
168 நாட்கள் நடைபெறும் பாத யாத்திரையில் 10 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடியின் சாதனை குறித்த விளக்கப்புத்தகம் வெளியிடப்படும். ஒவ்வொரு இடத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார்கள். 29-ஆம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து இந்த நடைப்பயணம் தொடங்கும். 1700 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 234 தொகுதிகளுக்கும் கால்நடையாக சென்று மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பாக கட்சி பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
தலைவர்கள் பங்கேற்பு:
அண்ணாமலையின் பாதயாத்திரையை முன்னிட்டு இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொள்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வது குறித்து உறுதியாகவில்லை. அவருக்கு பதிலாக கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று திமுக கூட்டணியை சாராத, தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்த பாதயாத்திரையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சீமான் விமர்சனம்:
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் விதமாக அண்ணாமலை இந்த நடைபயணத்தை முன்னெடுத்துள்ளார். ஆனால், இந்த பாதயாத்திரை செல்வது எல்லாம் பழைய ஸ்டைல், அதெல்லாம் தற்போது பலனளிக்காது என சீமான் விமர்சித்துள்ளார்.