Karnataka Hijab Row: கர்நாடக பள்ளிச்சீருடை விவகாரம்: அவசர வழக்காக எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் மறுப்பு
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்து வருவதாகவும், தற்போது இதில் தலையிட விரும்பவில்லை என்றும் இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பள்ளி சீருடை தொடர்பான மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க இந்திய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்து வருவதாகவும், தற்போது இதில் தலையிட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில் முஸ்லிம் மாணவிகள் அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. உடுப்பி, குந்தாப்பூர் பியுசி கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு, வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வரக் கடந்த அவரம் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் வாயிற்கதவுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Supreme Court declines to urgently list a plea seeking transfer of the petitions from Karnataka High Court relating to Hijab row to the apex court.
— ANI (@ANI) February 10, 2022
Supreme Court says HC is getting the matter today, asks why it should interfere at this stage. It refuses to give any specific date pic.twitter.com/OlOO7hoRU5
இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மத ரீதியான அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றுகூறி பந்தார்கர் கல்லூரி ஆண் மாணவர்கள், இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கழுத்தில் காவி நிறத் துண்டை அணிந்து வந்தனர். இதற்கிடையே பிப்.5 அன்று இந்து மாணவிகளும் கழுத்தில் காவி வண்ணத் துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் பிப்.7 அன்று கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் அவர்கள் தனியாக வேறொரு வகுப்பில் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்படவில்லை.
இந்நிலையில், முஸ்லிம் மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு கடந்த 8ம் தேதி தனி நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத், ஹிஜாப் அணியும் மாணவிகள் தரப்பில் இருந்து வாதாடினார். அவர், ''முஸ்லிம் கலாச்சாரத்தில், பெண்கள் தலையில் ஹிஜாப் அணிவது அடிப்படையான ஒன்று'' என்று தெரிவித்தார்.
அரசுத் தரப்பில் வாதாடிய அட்வகேட் ஜெனரல் , ''கல்லூரி சீருடைகளைத் தீர்மானித்துக் கொள்ளும் முழு சுதந்திரத்தைக் கல்லூரிகளுக்குக் கொடுத்துவிட்டோம். விதிமுறைகளில் தளர்வு தேவைப்படும் மாணவர்கள், கல்லூரி வளர்ச்சிக் குழுவை அணுகலாம்'' என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி தீட்சித், ''நாங்கள் சட்டப்படியே நடப்போம். விருப்பங்கள், உணர்வுகளின் அடிப்படையில் எதையும் தெரிவிக்க மாட்டோம். நாங்கள் அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ, அதன்படியே நடப்போம். எனக்கு, அரசியலமைப்புச் சட்டமே புனிதமான பகவத் கீதை" என்று தெரிவித்தார். இந்நிலையில்,நேற்றைய விசாரணையின் போது, ஜிஹாப் விவகாரம் தேசிய அளவிலான பேசுபொருளாக மாறியுள்ளதால், இந்த வழக்கைக் கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.