(Source: ECI/ABP News/ABP Majha)
Inactive PAN: ஆதார் - பான் கார்டை இணைக்கவில்லையா? எப்படி எல்லாம் பணம் பறிபோகும் தெரியுமா? இதுக்கு 20% கட்டணும்..
செயலிழந்த பான் கார்ட் கொண்டுள்ள பயனாளர்கள் வங்கிகளில் வைத்துள்ள நிரந்தர வைப்புத்தொகைக்கு, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
செயலிழந்த பான் கார்ட் கொண்டுள்ள பயனாளர்கள் வங்கிகளில் வைத்துள்ள நிரந்தர வைப்புத்தொகைக்கு, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆதார் - பான் இணைப்பு:
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்ட் உடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்காக பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஜுன் 30ம் தேதியுடன் அந்த அவகாசம் நிறைவடைந்தது. அந்த தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்ட்கள் அனைத்தும் தற்போது செயலிழக்க தொடங்கியுள்ளன. அதனை மீண்டும் செயல்படுத்த ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துவதோடு, 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், பயனாளர்கள் பல முக்கிய பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். அதோடு, சேமித்த வைத்த பணத்திற்கே கூடுதல் வரி செலுத்த வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
20% டிடிஎஸ்:
வங்கியில் நிரந்தர வைப்புத்தொகை திட்டத்தை வைத்திருப்பவராக இருந்து, நீங்கள் ஆதாருடன் இணைக்கப்படாததன் காரணமாக உங்களது பான்-கார்ட் செயலிழந்து இருந்தால், உங்களால் 15GH படிவத்தை இனி சமர்பிக்க முடியாது. இதனால், வழக்கமாக விதிக்கப்படும் டிடிஎஸ் (TDS) ஆன 10 சதவிகிதத்திற்கு பதிலாக 20 சதவிகித டிடிஎஸ் கட்டணம் வசூலிக்கப்படும்.
டிடிஎஸ் விவரங்கள்:
நிரந்தர வைப்புத்தொகை மூலம் ஒரு நிதியாண்டிற்கு 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான வட்டியை வருவாயாக ஈட்டினால், பயனாளர் டிடிஎஸ் செலுத்த வேண்டியது கட்டாயம். உங்களது வங்கிக் கணக்கு பான் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருந்தால், 15GH படிவத்தை சமர்பித்து வரிவிலக்கு பெற்று 10 சதவிகித டிடிஎஸ் மட்டும் செலுத்தலாம். ஒருவேளை, உங்களது வங்கி கணக்குடன் பான் எண் இணைக்காவிட்டால், 20 சதவிகிதம் அளவிற்கு நீங்கள் டிடிஎஸ் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.
எச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
இந்த நிலையில் எச்டிஎஃப்சி வங்கி தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி “ஆதாருடன் இணைக்கப்படாததால் பான் கார்ட் செயல்படாமல் போயிருந்தால், பயனாளர்கள் தங்களது நிரந்தர வைப்புத் தொகைகான டிடிஎஸ்-க்கு விலக்கு அளிக்கக் கோரும் 15GH படிவத்தை சமர்பிக்க முடியாது. அவர்களுக்கு அதிகப்படியான டிடிஎஸ் கட்டணம் விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.
PAN இல்லாமல் FD ஐ முன்பதிவு செய்வதன் தாக்கங்கள் என்ன?
- பயனாளருக்கு 20% அளவிற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்
- வருமான வரித்துறையிடமிருந்து டிடிஎஸ் கிரெடிட்ஸ் பெற முடியாது
- டிடிஎஸ் சான்றிதழ் வழங்கப்படமாட்டாது
- 15GH உள்ளிட்ட பிற வரிவிலக்கு படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது/ டிடிஎஸ் அபராதாமும் பொருந்தும்