துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கான்வாய் வாகனம் விபத்து! நடந்தது என்ன?
கான்வாயில் சென்ற மாநில காவல்துறை இயக்கிய பொலிரோ வாகனம் கடுமையான மூடுபணியால் பார்வை குறைவாக இருந்ததால் திடீரென பிரேக் போட்டதால் கார் மோதலுக்கு உள்ளானது.
கடுமையான மூடுபனி காரணமாக ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா சென்ற கார் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஹிசாரின் அக்ரோஹா பகுதியில் விபத்துக்குள்ளானது.
கடுமையான மூடுபனி
டெல்லி மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிக அடர்த்தியான மூடுபனி சூழ்ந்திருந்த நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே வாகனங்கள் மெதுவாகவும் கவனமுடன் இயக்கப்பட்ட நிலையில் ஹரியானா துணை முதல்வர் கான்வாய் வாகனமே விபத்துக்குள்ளான சம்பவம் நடந்துள்ளது. டெல்லியின் பாலத்தில், காலை 5:30 மணிக்கு பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, பார்க்கமுடிந்த அளவு வெறும் 25 மீட்டர் மட்டுமே என்று ஒரு அறிக்கை கூறுகிறது. மேலும் சப்தர்ஜங் பகுதியில், 50 மீட்டருக்குத் தெரிவதாக கூறப்படுகிறது. அதே போல பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், வடக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடர்த்தியான முதல் மிக அடர்த்தியான மூடுபனி படர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்துள்ளது
துணை முதல்வர் கான்வாய் வாகனம் விபத்து
இந்த நிலையில், சௌதாலாவின் கான்வாய் ஹிசாரில் இருந்து சிர்சா நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. கான்வாயில் சென்ற மாநில காவல்துறை இயக்கிய பொலிரோ வாகனம் கடுமையான மூடுபணியால் பார்வை குறைவாக இருந்ததால் திடீரென பிரேக் போட்டதால் கார் மோதலுக்கு உள்ளானது. இந்த விபத்தில் துணை முதல்வர் காருக்கு பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன. இடித்த வண்டியில் ஒரு போலீஸ் கமாண்டோ காயமடைந்துள்ளார்.
ரயில்கள் தாமதம்
வட இந்தியாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு "அடர்த்தி முதல் மிக அடர்த்தியான மூடுபனி" நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று (திங்கள்கிழமை) கணித்திருந்தது. பஞ்சாப், ஹரியானா, தில்லி, வடக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் அடர்த்தியான பனிமூட்டம் இருப்பதையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டின. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக சுமார் 20 ரயில்கள் 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக வந்தன.
ரெட் அலர்ட்
வட இந்தியாவில் அடர்த்தியான மூடுபனி போன்ற சூழ்நிலைகளை அடுத்து, IMD நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு ஆலோசனைகளை வெளியிட்டது, அதில் வானிலை காரணமாக நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளில் வாகனம் ஓட்டுவது ஆபத்தானது, கவனமாக இயக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் 4 மாநிலங்களில் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையமும் மூடுபனி எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், விமான நிலையத்தில் குறைந்த தெரிவுநிலை நடைமுறைகள் நடந்து வருவதாகக் கூறியது. ஆனால் இதன் மூலம் விமானங்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை என்றும், தற்போது அனைத்து விமான சேவைகளும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. வானிலை மையம் மேலும் அமிர்தசரஸ், கங்காநகர், பாட்டியாலா மற்றும் லக்னோ ஆகிய பகுதிகளிலும் 25 மீட்டர் பார்க்கமுடிந்த அளவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பதிண்டாவில் இன்னும் மோசமான அடர்த்தியான மூடுபனி சூழ்ந்து இருந்த நிலையில், அங்கு பார்க்கமுடிந்த அளவு 0 ஆகக் பதிவுசெய்யப்பட்டது.