அக்னிவீரர்களுக்கு காவல்துறையில் பயிற்சி மிச்சம்.. ஹரியானா முதல்வர் மனோகர்லால் பேச்சு..
அக்னிபத் திட்டத்தில் பணியாற்றிவிட்டு வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும் என்று ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் கூறியுள்ளார்.
அக்னிபத் திட்டத்தில் பணியாற்றிவிட்டு வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும் என்று ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் கூறியுள்ளார்.
அக்னிபத் திட்டம்:
கொரோனா பரவல் காரணமாக, இந்திய ராணுவத்தில் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக ஆள் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்படாமல் இருந்தது. இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் இதற்காக தீவிரமாக தயாராகி வந்தனர். இந்தநிலையில், கடந்த ஜூன் 14ம் தேதி அக்னிபத் திட்டம் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
அக்னிபத் திட்டத்தின் கீழ் பணிக்கு சேரும் வீரர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்களின் பணிக்காலம் 4 ஆண்டுகாலம் என்றும் 17.5 வயது முதல் 23 வயதுக்குள் இருப்பவர்கள் இப்பணியில் சேரலாம் என்றும் சுமார் 45 ஆயிரம் வீரர்கள் இப்பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.
இளைஞர்கள் போராட்டம்:
மத்திய அரசின் இந்த அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேசம், குஜராத், பீஹார், தெலங்கானா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டத்தில் குதித்ததோடு வன்முறையில் இறங்கினர். பொதுச்சொத்துகளை அடித்து நொறுக்கிய இளைஞர்கள் பல ரயில்களை தீக்கிறையாக்கினர். இளைஞர்களின் போராட்டத்தை கட்டுபடுத்த பல்வேறு மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டன. வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்தனர்.
மனோகர் லால் கட்டார் பேச்சு:
இந்நிலையில், சண்டிகர் மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடியது. அப்போது, அக்னீவீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதுபற்றி பேசியுள்ள முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், "4 ஆண்டுகள் பணி முடித்து திரும்பும் அக்னி வீரர்களை யார் வேண்டுமானாலும் வேலைக்குத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அரசுப்பணிகளில் மட்டுமல்ல தனியார் துறை வேலைகளுக்கும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறினார். மேலும் ஒரு குடிமகனாக அவர்கள் நிறைய பயிற்சி மற்றும் நிறைய கற்றல் அனுபவங்களுக்குப் பிறகு ஊர் திரும்புவார்கள். அவர்கள் ஊர் திரும்பும்போது அவர்களுக்கு 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். அவர்கள் சண்டிகர் காவல்துறை பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு பயிற்சி வழங்குவதில் இருந்து 9 முதல் 12 மாதங்களை சேமிக்கலாம்" என்று கூறியுள்ளார்.
ஒருமுறை அவர்கள் ராணுவத்தில் பணியாற்றிவிட்டால் அவர்களிடம் நாட்டுப்பற்று நிறைந்திருக்கும் என்றும், பணி முடித்து ஊர் திரும்பியவுடன் அவர்கள் மீண்டும் படிக்கத்தொடங்களாம் என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு, அக்னிவீரர்களுக்கு மேலும் பல சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.