Haryana: அப்படிப்போடு.. திருமணம் ஆகாதவர்களுக்கு மாத ஓய்வூதியம்.. முதலமைச்சர் அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு..!
திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க இருப்பதாக சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்.
திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க இருப்பதாக சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்.
திருமணம் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். ஆடம்பரமாக, எளிமையாக, வித்தியாசமாக திருமணத்தை நடத்துவது ஒருபுறம் என்றால், மறுபுறம் திருமணம் செய்ய இணை கிடைக்காமல் திண்டாடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சொல்லப்போனால் கல்யாணம் ஆகாதது வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனிடையே திருமணம் ஆகாமல் தனியாக வசிப்பவர்களுக்கு ஹரியானா மாநில அரசு சிறப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஹரியானாவை சேர்ந்த 45 முதல் 60 வயதுடைய திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் ஓய்வூதியமாக மாதம் 2750 ரூபாய் வழங்க இருப்பதாகவும் அவர்களின் ஆண்டு வருமானம் 1.8 லட்சத்திற்குள்ளாக இருந்தால் அவர்களுக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். அதே போன்று 40 முதல் 60 வயதுக்குட்பட்ட துணையை இழந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,750 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே இந்த ஓய்வூதியத்துக்கு தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வருமானம் மக்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ஒவ்வொரு மாதமும் 20 கோடி ரூபாய் அரசு ஒதுக்க இருப்பதாகவும் இதனால் அரசிற்கு 240 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் ஹரியானா மாநிலத்தில் 65,000 திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களும், கணவரை இழந்த பெண்கள் 5687 பேர் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் ஏற்கனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருமணம் ஆகாதவர்களுக்கான ஓய்வூதிய பயனாளிகள் 60 வயதுக்கு பிறகு முதியோர்களுக்கான ஓய்வூதியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள நகர்ப்புற ஊராட்சி அமைப்புகள் மற்றும் நகர ஊரமைப்பு துறைகள் மூலமாக பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.