கிரிக்கெட்டில் ரிட்டயர்டு... பாலிடிக்ஸில் எண்ட்ரி... சுடச்சுட பஞ்சாப் தேர்தலில் களமிறங்குகிறாரா ஹர்பஜன்!
பாஜி.. ஹர்பஜன் சிங் என்பதைவிட இப்படிச் சொன்னால்தான் அகில இந்தியாவுக்கும் அடையாளம் தெரிகிறது. ட்விட்டரில் தமிழில் ட்வீட் போட்டே தமிழ்நாட்டிற்கும் செல்லப்பிள்ளையாகிவிட்டார் பாஜி.
பாஜி.. ஹர்பஜன் சிங் என்பதைவிட இப்படிச் சொன்னால்தான் அகில இந்தியாவுக்கும் அடையாளம் தெரிகிறது. ட்விட்டரில் தமிழில் ட்வீட் போட்டே தமிழ்நாட்டிற்கும் செல்லப்பிள்ளையாகிவிட்டார் பாஜி. அப்படிப்பட்ட பாஜி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் 23 ஆண்டுகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லோருடைய வாழ்க்கையில் கடினமான முடிவு எடுத்து, முன்னேறிச் செல்லும தருணம் வரும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த முடிவை அறிவிக்க இருந்தேன். ஆனால் அதற்கான சரியான தருணத்துக்காக காத்திருந்தேன். நான் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். பல்வேறு வழிகளில் இருந்தும் ஏற்கெனவே நான் ஓய்வு பெற்றுவிட்டேன். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இருந்ததால்தான் தாமதமாக அறிவிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
கூடவே, எல்லா நல்ல விஷயங்களும் இன்றுடன் முடிவுக்கு வந்தது. என்னுடைய வாழ்க்கையில் எல்லாமாக இருந்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். 23 ஆண்டு கால பயணம். இந்த அழகான பயணத்தில் அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன் என்றும் பதிவிட்டிருந்தார்.
இவ்வாறாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதை நெகிழ்ச்சி பொங்க அறிவித்துள்ள ஹர்பஜன் சிங், அடுத்த என்ன செய்யப்போகிறார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி?
காங்கிரஸில் இணைகிறாரா? கிரிக்கெட்டுக்குப் பின் அரசியலில் இறங்கப்போகிறார் ஹர்பஜன் சிங் என்பதுதான் கேள்வி. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மூன்று கட்சிகளும் ஆட்சிக்காக கடும் போட்டாபோட்டி போட்டு வருகின்றன.
அரசியல் நோக்கர்களோ ஆம் ஆத்மி அதிக இடங்களைப் பிடித்தாலும் கூட தொங்கு சட்டப்பேரவை தான் அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஏற்கெனவே 2019 மக்களவைத் தேர்தலில் ஹர்பஜன் சிங் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் பரவின. ஆனால் அதற்கு போலிச் செய்தி என்ற ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது ட்விட்டரில் ஹர்பஜன் சிங்குடன் எடுத்த புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படத்திற்கு அவர், சாத்தியங்களுக்கான புகைப்படம் என்று சூசகமாகக் தலைப்பிட்டிருந்தார். ஹர்பஜன் சிங்கை தி ஷைனிங் ஸ்டார் (மின்னும் நட்சத்திரம்) என்றும் பாராட்டிப் பதிவிட்டிருந்தார்.
Picture loaded with possibilities …. With Bhajji the shining star pic.twitter.com/5TWhPzFpNl
— Navjot Singh Sidhu (@sherryontopp) December 15, 2021
இந்தப் புகைப்படத்தால் ஹர்பஜன் சிங் காங்கிரஸ் கட்சியில் இணையக்கூடும் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருப்பது அரசல்புரசல் பேச்சுக்கள் உண்மையாகுமோ என்று நினைக்க வைக்கிறது.
ஒருவேளை தேர்தலில் போட்டியிட்டால், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் ஹர்பஜன் சிங் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.