”நான் நட்டாவின் உதவியாளர்! அமைச்சர் பதவி வேணுமா?” - 28 எம்எல்ஏக்களுக்கு பறந்த போன் கால்... வசமாக சிக்கிய மோசடி மன்னன்!
பாஜக எம்எல்ஏக்கள் மூன்று பேரை தொடர்பு கொண்ட குஜராத்தை சேர்ந்த அந்த நபர், அமைச்சர் பதவி வாங்கி தருவதாக கூறி பணத்தை பறித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
![”நான் நட்டாவின் உதவியாளர்! அமைச்சர் பதவி வேணுமா?” - 28 எம்எல்ஏக்களுக்கு பறந்த போன் கால்... வசமாக சிக்கிய மோசடி மன்னன்! Gujarat Conman Dialled 28 MLAs With Cabinet Berth Promise know more details here ”நான் நட்டாவின் உதவியாளர்! அமைச்சர் பதவி வேணுமா?” - 28 எம்எல்ஏக்களுக்கு பறந்த போன் கால்... வசமாக சிக்கிய மோசடி மன்னன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/21/7a678458987eac1afe543e9848cd4a971684634109183729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவர், அமைச்சர் பதவி வாங்கி தருவதாக கூறி, மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏக்களிடம் பணம் பறித்ததாக வெளியாகி உள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நடந்து வருகிறது.
அமைச்சர் பதவி வாங்கி தருவதாக கூறி மோசடி:
பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி. இச்சூழலில், பாஜக எம்எல்ஏக்கள் மூன்று பேரை தொடர்பு கொண்ட குஜராத்தை சேர்ந்த அந்த நபர், அமைச்சர் பதவி வாங்கி தருவதாக கூறி பணத்தை பறித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதை தொடர்ந்து, நாக்பூர் காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். இதற்கிடையே, அந்த நபர், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்எல்ஏக்களிடமும் தொடர்பு கொண்டு பேசியது தற்போது தெரிய வந்துள்ளது. இதே வழக்கில், அவரை கடந்தாண்டு டெல்லி காவல்துறை கைது செய்திருக்கிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் பெயர் நீரஜ் சிங் ரத்தோட். குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தை சேர்ந்த மோர்பி நகரில் வசித்து வருகிறார். இந்த சம்பவத்தை பற்றி விரிவாக பேசிய மூத்த காவல்துறை அதிகாரி, "கடந்த மூன்று மாதங்களாக, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஹரியானா, ஜார்கண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 28 எம்எல்ஏக்களுடன் ரத்தோட் தொடர்பு கொண்டு அவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வாங்கி தருவதாக கூறி, அவர்களில் மூன்று பேரிடம் பணத்தை பறித்துள்ளார்.
எம்எல்ஏக்களுக்கு பறந்த போன் கால்:
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் தனி உதவியாளர் போல் நடித்து, ரத்தோட் எம்எல்ஏக்களை அழைத்துள்ளார். போன் செய்த பின், நட்டா பேசுவார் எனக் கூறி, அவரே வேறு குரலில் மாற்றி பேசியுள்ளார்.
முன்னதாக, மத்திய அரசின் முதன்மையான வீட்டு வசதி திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவில் முக்கிய பதவி வாங்கி தருவதாக கூறி, டெல்லியைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினரை ரத்தோட் ஏமாற்றினார். எம்எல்ஏவின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்திய தண்டனைச் சட்டம், 419 (ஆள்மாறாட்டம்), 420 (ஏமாற்றுதல் மற்றும் பணம் பறித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், ரத்தோட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், ரத்தோட் வீட்டிற்கு அருகில் உள்ள மொபைல் கடையின் உரிமையாளர் ஏமாற்றப்பட்ட பணம் அனைத்தையும் ஆன்லைனில் பெற்றது தெரிய வந்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மகராஷ்டிராவில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறலாம் என செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், மக்கள் பிரிதிநிதிகளாக உள்ள எம்எம்ஏக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)