‘விருந்தில் ஆட்டுக் கறி இல்லை’- திருமணத்தை நிறுத்திய மணமகன் !
திருமணத்திற்கு பரிமாறப்பட்ட உணவில் ஆட்டு இறைச்சி இல்லை எனக் கூறி மணமகன் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது நாம் அறிந்த ஒன்று. அவ்வாறு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நடத்த பெரும்பாலும் பெண் வீட்டார் தான் அதிக சிரம படுத்தப்படுகின்றனர். ஏனென்றால் பல இடங்களில் திருமண செலவுகளை மணமகள் வீட்டினர் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். அந்தவகையில் ஒரு திருமண ஏற்பாட்டில் நிகழ்ந்த சிறிய பிரச்னையால் ஒரு திருமணமே நின்றுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கியான்ஜார் மாவட்டத்தின் ஜஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்காந்த் பாட்ரா(27). இவருக்கும் பந்த்கான் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த திருமணம் கடந்த புதன்கிழமை நடக்க இருந்தது. இதற்காக பெண் வீட்டார் சார்பில் முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் திருமணத்திற்கு முன்பாக பரிமாறப்பட்ட உணவில் ஆட்டு இறைச்சி இல்லை என்று மணமகன் வீட்டினர் கோபம் அடைந்துள்ளனர்.
அத்துடன் இது தொடர்பாக பெரும் பிரச்னை செய்துள்ளதாக தெரிகிறது. இந்த பிரச்னை மணமகன் பாட்ராவிடம் சென்றுள்ளது. அப்போது கோபம் அடைந்த அவரும் மணமகள் குடும்பத்திடம் கடுமையாக நடந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் கோபம் முற்ற திருமணத்தை நிறுத்திவிட்டு பாதியில் தன்னுடைய உறவினர்களை அழைத்து கொண்டு பாட்ரா சென்றுள்ளார். அந்த சமயத்தில் பெண் வீட்டார் அவருடம் எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளனர். எனினும் அவர்களுடைய வார்த்தைக்கு செவி மடுக்காமல் பாட்ரா திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
ட்ரோன்கள் எப்படி செயல்படுகின்றன? ட்ரோன்களால் ஆபத்து உள்ளதா?
அதன்பின்னர் அதேபகுதியிலுள்ள அவருடைய உறவினரின் வீட்டிற்கு சென்று பாட்ரா தங்கியுள்ளார். அடுத்த நாள் அவர் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்த பெண் வீட்டார் பெரும் சோகத்தில் உள்ளனர். எனினும் அவர்கள் யாரும் இதுவரை காவல்துறையினரிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை.
ஒரு திருமண விருந்தில் ஏற்பட்ட பிரச்னை திருமணத்தை நிறுத்தும் வரை சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் 1980களில் அதிகமாக நடப்பது வழக்கமாக இருந்துள்ளது. அந்த சம்பவங்கள் சில நாட்கள் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அவை மீண்டும் நிகழ தொடங்கியுள்ளது அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி மற்றும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தின் போது எப்போதும் மணமகன் வீட்டின் கை ஓங்கி இருப்பது தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த ஆண் ஆதிக்க சமூக மனநிலை எப்போது மாறும் என்பது தான் பெரிய கேள்வி குறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:SI of Varkala: அன்று ஐஸ் விற்பனை.. இன்று காவல் அதிகாரி - வைராக்கியத்தால் வென்ற சிங்கப்பெண்!