Parliament Special Session : எதிர்பார்ப்பை கிளப்பிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்.. மத்திய அரசின் ரகசிய திட்டம் என்ன?
பெண்கள் இட ஒதுக்கீடு, ஒரே நாடு ஒரே தேர்தல், 'இந்தியா' பெயர் மாற்றம் ஆகியவை தொடர்பாகவும் சட்டம் இயற்றப்படலாம் என பல்வேறு விதமான தகவல்கள் வெளியானது.
வரும் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுவாக, முக்கியமான காரணங்களுக்காகதான் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும்.
சிறப்பு கூட்டத்தொடர் எதற்கு?
அந்த வகையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை இயற்ற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அதேபோல, பெண்கள் இட ஒதுக்கீடு, ஒரே நாடு ஒரே தேர்தல், 'இந்தியா' பெயர் மாற்றம் ஆகியவை தொடர்பாகவும் சட்டம் இயற்றப்படலாம் என பல்வேறு விதமான தகவல்கள் வெளியானது. ஆனால், இவை எதையுமே மத்திய அரசு உறுதி செய்யாமல் இருந்தது.
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தன. இப்படிப்பட்ட சூழலில்தான், சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படுவதன் நோக்கத்தை மத்திய அரசு கடந்த 13ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் பற்றி விவாதிக்கப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்தது.
நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள் என்னென்ன?
நாடாளுமன்றத்தின் சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள், அதிலிருந்து கற்று கொண்டது என்ன? என்பது குறித்து சிறப்பு அமர்வில் விவாதிக்கப்பட உள்ளது. அதே சமயத்தில், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், 'வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, 2023' மற்றும் 'பத்திரிகை மற்றும் பதிவுசெய்தல் மசோதா, 2023' ஆகியவற்றை மக்களவையில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேல்குறிப்பிடப்பட்ட இரண்டு மசோதாக்களை மத்திய அரசு, கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி, மாநிலங்களவையில் நிறைவேற்றியது.
இதுமட்டும் இன்றி, தபால் நிலைய மசோதா, 2023ஐ மக்களலையில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் நியமன மசோதா, விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்களை தவிர்த்து மேலும் கூடுதலான மசோதாக்கள் சிறப்பு கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"மத்திய அரசின் ரகசிய திட்டம்"
நாளை மறுநாள் சிறுப்புக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய பாஜக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அழைப்பு அந்தந்த கட்சி தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
ஒன்னும் இல்லாததற்கு சிறப்புக்கூட்டத்தொடர் கூட்டப்பட வேண்டுமா என்றும் நவம்பர் மாதம் கூட்டப்பட உள்ள குளிர்காலக் கூட்டத்தொடர் வரை காத்திருந்திருக்கலாம் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். பல சர்ச்சையான சட்டங்களை இயற்ற மத்திய அரசு ரகசிய் திட்டம வைத்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.