Maharashtra: மேரி மாதாவாக மாறிய காளி சிலை.. சாமி கும்பிட வந்த பக்தர்கள் அதிர்ச்சி!
வழக்கமாக பாரம்பரியப்படி கருப்பு அல்லது அடர் நீல நிற தோலுடன் தான் காளி தெய்வத்தின் முகம் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கோயிலில் சிலை வெள்ளை நிறத்தில் இருந்தது.

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள கோயிலில் அமைக்கப்பட்டிருந்த காளி தேவியின் சிலை ஒன்று அன்னை மேரியைப் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதன் புகைப்படம் மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் மத உணர்வுகளைப் புண்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கோயிலின் பூசாரி கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையின் செம்பூரில் உள்ள காளி கோயிலில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த கோயில் அனிக் கிராமத்தில் உள்ள இந்து தகன மைதானத்திற்குள் அமைந்துள்ளது. இந்த காளி கோவிலில் அப்பகுதி மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 22ம் தேதி சனிக்கிழமை ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதாவது காளி தேவி கோயிலில் மேரி மாதா சிலை வைக்கப்பட்டிருந்தது. என்னடா இது என பக்தர்கள் குழம்பிய நிலையில் காளி தேவிக்கு தங்க நிற அங்கிகளை அணிந்து, வெள்ளை அலங்காரங்களுடன் கூடிய பெரிய கிரீடத்தையும், மேலே ஒரு முக்கிய தங்க சிலுவையையும் அணிந்திருப்பதும் தெரிய வந்தது.
வழக்கமாக பாரம்பரியப்படி கருப்பு அல்லது அடர் நீல நிற தோலுடன் தான் காளி தெய்வத்தின் முகம் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கோயிலில் சிலை வெள்ளை நிறத்தில் இருந்தது. அந்த சிலை குழந்தை இயேசுவைக் குறிப்பதாகக் கருதப்படும் ஒரு குழந்தையின் உருவத்தை கையில் ஏந்தியிருப்பது போல் காட்டப்பட்டது. கோயிலின் பின்னணியும் ஒரு பெரிய தங்க சிலுவையைக் கொண்ட சிவப்புத் துணியால் மாற்றப்பட்டு தேவாலய இடம் போல காட்சியளித்தது. அலங்கார தேவதை விளக்குகள் மற்றும் இருபுறமும் டின்ஸல் மூடப்பட்டிருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கோயிலின் பக்தர்கள் கோயில் பூசாரியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர் தனது கனவில் காளி தெய்வம் தோன்றி, தன்னை அன்னை மேரியின் வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும் என அறிவுறுத்தியதாகக் தெரிவித்துள்ளார். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து முதற்கட்டமாக சிலை சேதப்படுத்துதல் பற்றி வதந்திகள் அல்லது மத ரீதியிலான கலவரம் ஏற்படுவதைத் தடுக்க, போலீசார் முன்னிலையில் காளி சிலை மேரி மாதா நிலையில் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோயில் பூசாரி கைது செய்யப்பட்டு இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் காளி மேரி மாதாவாக மாற காரணம் கனவா அல்லது வேறு யாரும் எதாவது சொன்னார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.






















