Tirupati leopard Restriction: சிறுத்தை நடமாட்டமா? கோவிந்தா கோஷமிடுங்கள்.. திருப்பதி மலைப்பாதையில் புதிய கட்டுப்பாடுகள்
திருப்பதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை தொடர்ந்து, மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருப்பதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை தொடர்ந்து, மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சிறுமியை கொன்ற சிறுத்தை:
ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கோவூர் மண்டலத்தின் போத்தி ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பாக தனது குடும்பத்துடன் திருப்பதியில் இருந்து திருமலைக்கு, மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தினேஷ்குமாரின் 6 வயது மகளான லக்ஷிதா திடீரென காணாமல் போனார்.
இதையடுத்து முடுக்கிவிடப்பட்ட தேடுதல் பணியில், உடல் முழுவதும் காயங்களுடன் சிறுமி பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அதோடு, சிறுத்தை தாக்கி தான் சிறுமி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டம் மற்றும் பக்தர்கள் மீதான வன விலங்குகளின் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், இதனை தடுக்க தேவஸ்தானம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.
ஆலோசனைக் கூட்டம்:
இந்த நிலையில் தான், சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் தொடர்பாக, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள்:
இதுதொடர்பாக பேசிய தர்மா ரெட்டி “சிறு குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் தங்களது குழந்தைகளை தங்களுடன் பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். குழுக்களாக வரும் பக்தர்கள் சாமி பாடல்களை பாடிய படியும் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடியும் நடைபாதையில் வரவேண்டும். இதனால் வன விலங்குகள் நடைபாதையில் வருவதை தடுக்க முடியும்.
அலிபிரி மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பைக்கில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. நடைபாதையில் வனவிலங்குகள் வருவதை தடுப்பது குறித்து நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு வனத்துறையினருடன் இணைந்து கம்பி வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுத்தை தாக்கி இறந்த லக்ஷிதா குடும்பத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.5 லட்சமும், வனத்துறை சார்பில் ரூ.5 லட்சமும் என மொத்தம் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
சிறுத்தையை பிடிக்கும் பணிகள் தீவிரம்:
சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் 40 அடி தூரத்திற்கு ஒரு பாதுகாவலர் என 100 பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். மேலும் நடைபாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற உள்ளது.
டிரோன் கேமரா மூலமும் நடைபாதையை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காளி கோபுரம் முதல் நரசிம்ம சாமி கோயில் வரை 2 மீட்டருக்கு ஒரு பாதுகாவலர் நிறுத்தப்பட உள்ளனர். நடைபாதையில் செல்லும் பக்தர்கள் இனி தேவஸ்தான விஜிலென்ஸ் பாதுகாவலர்கள் முன்பாக குழுக்களாக செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது” என தர்மா ரெட்டி கூறினார்.