திருமணம் செய்ய பெண்களே இல்லை... குதிரையில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இளைஞர்கள்.!
மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் 50 திருமணமாகாத இளைஞர்கள் தங்களுக்கு திருமணம் செய்ய பெண் வேண்டும் என்று குதிரையில் பேரணியாக சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் 50 திருமணமாகாத இளைஞர்கள் தங்களுக்கு திருமணம் செய்ய பெண் வேண்டும் என்று குதிரையில் பேரணியாக சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு காலத்தில் பெண் சிசு கொலை உச்சத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் பெண் சிசு கொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கருத்தம்மா திரைப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, பெண் சிசு கொலையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. அதன் விளைவாக, பெண் சிசு கொலை பெரிய அளவில் குறைந்துள்ளது.
பெண் குழந்தைகளை ஒரு காலத்தில் சுமையாக கருதப்பட்ட நிலையில், தற்போது அந்த சூழல் முற்றிலுமாக மாறி வருகிறது. இருந்தபோதிலும், ஆண் - பெண் பாலின விகிதம் பல்வேறு மாநிலங்களில் அபாயகரமான நிலையில் உள்ளது.
அதாவது, பெண்களை காட்டிலும் ஆண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். ஆனால், பொதுவாக ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக இருக்க வேண்டும்.
பாலின விகிதம் சமமற்றதாக இருந்தால், அது சமூகத்தில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, திருமணம் செய்யும்போது, பெண்கள் கிடைக்காத சூழல் எல்லாம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அந்த பிரச்னைதான் தற்போது மகாராஷ்டிராவில் நிலவிவருகிறது. அதன் விளைவாக, மணப்பெண்களை வேண்டி இளைஞர்கள் சோலாப்பூர் மாவட்டத்தில் பேரணியாக சென்றுள்ளனர். ஜோதி கிராந்தி பரிஷத் என்ற அமைப்பு, இந்த மணமகன் பேரணியை நேற்று நடத்தியுள்ளது.
பேரணியை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியருக்கு இளைஞர்கள் மனு அளித்துள்ளனர். நாட்டில் பெண் சிசுக்கொலைகளைத் தடுக்கவும் பாலின விகிதம் குறைந்து வருவதைத் தடுக்கவும் இயற்றப்பட்ட PCPNDT சட்டத்தை கண்டிப்பாக பின்பற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sex ratio skewed, eligible bachelors take out march in #Maharashtra's #Solapur to seek brides https://t.co/6zbr7jkj91
— The Tribune (@thetribunechd) December 22, 2022
மணமாகாத ஆண்களுக்கு பெண்களை ஏற்பாடு செய்து தருமாறு பேரணியில் கலந்து கொண்ட இளைஞர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில், ” மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆண் - பெண் விகிதாச்சாரம் 1000 - 889 என்ற அளவில் உள்ளது. இதனால் திருமணத்திற்கு தகுதியான ஆண் குழந்தைகளுக்கு மணமகள் கிடைப்பதில்லை. இந்த பேரணியின் மூலம் பெண் சிசுக்கொலை, பாலின சமத்துவமின்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முடிவு வேண்டும். இந்த ஏற்றத்தாழ்வுக்கு அரசாங்கமே பொறுப்பு. இதன் மூலம், தாயின் வயிற்றில் இருக்கும் கருவின் பாலினத்தை கண்டறிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.
மணமகன் அணிவது போல ஆடைகளை அணிந்து, குதிரைகளில் சவாரி செய்தபடி இசைக்குழுவுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு இளைஞர்கள் சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜோதி கிராந்தி பரிஷத் அமைப்பின் நிறுவனர் ரமேஷ் பாரஸ்கர் கூறுகையில், "மக்கள் இந்த பேரணியை கேலி செய்யலாம். ஆனால், கசப்பான உண்மை என்னவென்றால், மாநிலத்தில் ஆண்-பெண் விகிதம் சமமற்றதாக இருப்பதால் திருமண வயது இளைஞர்களுக்கு மணமகள் கிடைப்பதில்லை.
மகாராஷ்டிராவின் 1,000 ஆண்களுக்கு 889 பெண்களே உள்ளனர். பெண் சிசுகொலையின் காரணமாக இந்த சமத்துவமின்மை நிலவுகிறது இந்த ஏற்றத்தாழ்வுக்கு அரசாங்கமே பொறுப்பு" என்றார்.