Political Legacy of Mahatma Gandhi : காந்தியின் சிந்தனைகளும், முரண்பாடுகளும் என்றுமே வாழும்!
காந்தி, கதர் ஆடைகளுக்கு மற்றும் ராட்டை சுற்ற வில்லை. காந்தியின் ராட்டைக்கு எதிர்காலம் கிடையாது. தொடங்கும் இடத்தில் முடியும், முடியும் இடத்தில் இருந்து திரும்பத் தொடங்கும்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர், துணைத் தலைவர், பிரதமர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்திற்கான நமது பகிரப்பட்ட தேடலில், காந்திஜியின் அகிம்சை கொள்கை, நம்மையும், பிறநாடுகளையும் தொடர்ந்து வழிநடத்தும் என்று குடியரசுத் தலைவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
காந்தி ஜனநாயகவாதியா?
இன்றைய அரசியல் சூழலில் ஜனயாகத்தைப் பற்றிய காந்தியின் முரண்பாடுகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. முன்னதாக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நியாயப்படுத்தி பேசிய பிரதமர் மோடி, "இந்த திருத்த சட்டம் எனது திட்டம் அல்ல; இது மகாத்மா காந்தியின் எண்ணங்களால் ஈர்க்கப்பட்ட ஒன்று. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பும்போது, அவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்று காந்தி கூறியிருந்தார். தனது பெயருடன் காந்தியை கொண்டுள்ளவர்கள் குறைந்தபட்சம் காந்தியை பின்பற்ற வேண்டும்" என்று கூறியிருந்தார்.
தீண்டாத மக்கள் அரசியல் சக்தியாக ஆகிவிடக்கூடாது என்பதில் காந்தி கவனமாக இருந்ததாக எழுத்தாளார் ரவிக்குமார் தனது எழுத்தின் மூலம் வெலிபடுத்தி வருகிறார். பட்டியலின மக்களுக்கு இரட்டை வாக்குரிமையுடன்கூடிய தனி வாக்காளர் தொகுதியை ( separate electorate ) அம்பேத்கர் போராடிப் பெற்றபோது, எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் துவக்கி அதைப் பறித்தவர் காந்தி என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைக்கிறார்.
சாதி அமைப்பு தவறானதல்ல, தீண்டாமைதான் தவறு என்ற காந்தியின் கோட்பாட்டுக்கு பெரியார்,அம்பேத்கர் போன்ற முற்போக்கு வாதிகளும் எதிர்விணையாற்றியுள்ளனர். மேலும், காந்தியின் சுயராஜ்யம் புத்தகத்தில், "இங்கிலாந்தின் பாராளுமன்ற முறை என்பது ஒரு மலடி மற்றும் விலைமகளிரைப் போன்றது" போன்ற கடுமையான சொற்களைப் பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தார். இந்தியாவுக்கு அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்று எதிர்பார்ப்பும், வேட்கையும் அவரிடம் இருந்தது.
முரண்பாடுகளை புரிந்து கொள்ளுதல்:
ஆனால், காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை விடுவிக்க காந்தி மேற்கொண்ட சத்தியாகிரகம், அகிம்சை முறை, நல்லிணக்கம், உலகளாவிய சகோதரத்தும் ஆகியவை தான் ஜனநாயகத்தின் அடிப்படை தூண்களாக உள்ளன. எனவே, காந்தி ஜனநாயகவாதியா? இல்லையா? என்ற கேள்விக்குப் பதில தேடுவதற்கு முன்பு, நவீனகால அரசியலைப் பற்றிய காந்தியின் கருத்துக்களை புரிந்து கொள்வது முக்கியத்துவம் பெறுகிறது.
இன்றைய நவீனகால அரசியல் ஜான் லாக்கி, ஹாப்ஸ் போன்ற மேற்கத்திய சிந்தனையாளர்களிடம் இருந்து தொடங்குகிறது. மனிதர்கள் ஒவ்வொருவரும் பிறரிடம் ஓநாய்களைப் போன்று பகைமையுடன் இருக்கக்கூடியவர்கள் என்ற ஹாப்ஸ் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
எனவே, சமூகத்திலுள்ள ஆளப்படுகின்ற மனிதர்கள் தங்களுடைய நடைமுறைகளையும் வாழ்வியலையும் சீராக சண்டை, சச்சரவின்றி நடத்திட தங்களுக்குள் நடுநிலை கொண்ட ஒரு அமைப்பு வேண்டும் என உணர்ந்ததனால் ஒரு சமூக ஒப்பந்தத்தை (அரசு நிர்வாகம், சிவில் சொசைட்டி, ஹாப்ஸ் இறையாண்மை) உருவாக்கியதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். இதனடிப்படையில் தான் பாரளுமன்ற ஜனநாயகம் முறை செயல்பட்டு கொண்டு வருகிறது.
நிகழ்கால அரசியலில், வன்முறை இருப்பதினால் மட்டுமே அமைதி உருவாகிறது. அதாவது, அமைதி என்பதற்கு தன்னிச்சையான கருத்தாக்கம் கிடையாது. சண்டை சச்சரவுகளை தீர்க்கும் ஒரு ஒரு கருவியாகவே அமைதி பார்க்கப்படுகிறது. உதாரணமாக, ஆப்கானிஸ்தான் மீது போர் அறிவிப்பது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜார்ஜ் புஷ், " நாங்கள் போரைப் பற்றி பேசும்போது, உண்மையில் அமைதியைப் பற்றி பேசுகிறோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" (I just want you to know that, when we talk about war, we’re really talking about peace) என்று தெரிவித்தார்.
எனவே, அமைதியை நிலைநிறுத்த அரசின் தலையீடு இருக்க வேண்டும். உதாரணமாக, தூத்துக்குடி ஸ்டர்லைட் போராட்டம். எனவே, நவீன கால அரசும், வன்முறைகளும் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளது. இந்த, ஒருங்கிணைப்பை தான் காந்தி எதிர்த்து வந்தார். இதனடிப்படையில் தான் ஜனநாயகத்தைப் பற்றிய காந்தியின் சிந்தனைககளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் சொல்ல போனால், காந்தி அமைதி என்ற பெருங்கதையாடல் மீதி பெரிய நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
மாறாக,அகிம்சை முறையே காந்தியின் முக்கிய அரசியல் ஆயுதமாக இருந்தது. காந்தியைப் பொறுத்த வரையில், அகிம்சை என்பது வேறு, அமைதி என்பது வேறு. அகிம்சை என்றும் தனிமனித அனுபவம்/சுதந்திரம். இதற்கு,அரசும் தேவையில்லை, அதிகாரமும் தேவையில்லை. அகிம்சை என்ற கருத்தாக்கத்துக்கு எந்த நோக்கமும் கிடையாது. வெற்றி/தோல்விகளுக்கு அப்பாற்பட்டது. அகிம்சை என்பது உலக நிகழ்வுகளில் இருந்தும் சுயவிருப்பு/வெறுப்புகளில் இருந்தும் பின்வாங்குவது. மதுரையில் காந்தி மேலாடையை துறந்தது, பிரம்மச்சரியம் மேற்கொண்டது, ராட்டை சுற்றுவது எல்லாம் அகிம்சையின் வெளிப்பாடு. காந்தி, கதர் ஆடைகளுக்கு மற்றும் ராட்டை சுற்ற வில்லை. காந்தியின் ராட்டைக்கு எதிர்காலம் கிடையாது. தொடங்கும் இடத்தில் முடியும், முடியும் இடத்தில் இருந்து திரும்பத் தொடங்கும். அவர் உருவாக்கிய ஒவ்வொரு கதர் ஆடையும், ஒருவகையான அரசியல் புரிதல், தனிமனித அனுபவம். வெறுமையின் பிறப்பிடம்.
காந்தியின் சக்கரம் சாதிய அடக்குமுறைகளையும் காலனிய சிந்தனைகளையும் மறுத்து தள்ளியது. சக்கரத்தை ஒவ்வொரு முறை சுற்றும்போதும் வெகுஜன அரசியலை உருவாக்கியது. மேலாடை துறப்பு ஆணாதிக்கத்தை கேள்வி கேட்டது. சுருங்கச் சொன்னால், காந்திய சிந்தனைகள் என்பது இந்திய மக்கள், இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசு, தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாடு, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி போன்ற பெருங்கதையாடல்களை விவாதிக்கும் தனிமனித மேடையாகவே இருந்து வருகிறது.
இன்றைய முக்கிய சிறப்புச் செய்திகள் இதோ...
Survivor Tamil: வனமே வனத்திற்கு வந்தது போல்... சர்வைவரில் வந்திறங்கிய வனேசா குரூஸ் யார்?
‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!
அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு எதிர்ப்பு... போராட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள்!