புயலை கிளப்பிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்... சம்மன் அனுப்பிய சிபிஐ..!
ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஊழலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி சாட்சியமாக நேரில் ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஊழலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி சாட்சியமாக நேரில் ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
சம்மன் அனுப்பிய சிபிஐ:
இதுகுறித்து பேசிய சத்யபால் மாலிக், "மத்திய டெல்லியில் உள்ள சிபிஐ-இன் அக்பர் ரோடு விருந்தினர் மாளிகையில் ஆஜராகும்படி சிபிஐ கேட்டுக் கொண்டது. சில விளக்கங்களை கேட்டுள்ளனர். நான் ராஜஸ்தானுக்குச் செல்கிறேன். அதனால், நான் ஏப்ரல் 27 முதல் 29 வரையிலான தேதிகளை அவர்களுக்குக் கொடுத்துள்ளேன்" என்றார்.
ஜம்மு காஷ்மீர் ஆளுநராக சத்யபால் மாலிக் பதவி வகித்தபோது, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனத்தின் ஒப்பந்தத்தை 2018 இல் ரத்து செய்தார்.
இது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படும் மோசடியில் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் டிரினிட்டி ரீஇன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
காப்பீட்டு திட்டத்தில் மோசடி நடந்ததாக மாலிக் கூறியதை அடுத்து, சிபிஐ நடவடிக்கை எடுத்தது. சுமார் 3.5 லட்சம் ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், செப்டம்பர் 2018இல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ஒரு மாதத்திற்குள் திட்டத்தை ரத்து செய்தார் அப்போதைய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்.
அந்த நேரத்தில், விளக்கம் அளித்த சத்யபால் மாலிக், ஒப்பந்தத்தில் மோசடி நடந்ததை மாநில அரசு ஊழியர்கள் கண்டறிந்ததால் அதை அவர்கள் ரத்து செய்ய விரும்பியதாகவும், விவரங்களைப் பார்த்த பிறகு அவரும் அதே முடிவை எடுத்ததாகவும் கூறினார்.
இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்காக சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் மாலிக்கிடம் பேசினர்.
புயலை கிளப்பிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்:
கடந்த 2018ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரில் உச்சக்கட்ட அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பிகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த சத்தியபால்மாலிக் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நியமித்தது. இவர், ஆளுநராக பதவிவகித்தபோதுதான் ஜம்மு காஷ்மீர், பல்வேறு அரசியல் கொந்தளிப்புகளை எதிர்கொண்டது. குறிப்பாக, புல்வாமா தாக்குதல், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, இணையம் முடக்கப்பட்ட சம்பவங்கள் சத்யபால் மாலிக் ஆளுநராக பதவி வகித்தபோதுதான் நடந்தது.
பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, கோவா மாநில ஆளுநராக சத்யபால்மாலிக் மாற்றப்பட்டார். அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரை கவனித்து கொள்ளும்படி, பிரதமர் மோடி அரசால் நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக், சமீபத்தில் அரசியலில் புயலை கிளப்பும் விதமாக பல்வேறு தகவல்களை பகிர்ந்திருந்தார்.