(Source: ECI/ABP News/ABP Majha)
Penalty Idol Touching : "நாங்க தொட்டா கடவுளுக்கு பிடிக்கவில்லையா? அம்பேத்கரை வழிபடுவோம்” : அபராதம் விதிக்கப்பட்ட பட்டியலின குடும்பம்
கடவுளுக்கு நாம் தொடுவது பிடிக்கவில்லை என்றால், மக்கள் நம்மை ஒதுக்கி வைக்க விரும்பினால், நாம் பிரார்த்தனை செய்து என்ன பயன்? கடவுளுக்கு நன்கொடை அளித்திருக்கிறேன். இனி நான் அப்படி எதுவும் செய்யமாட்டேன்
“கடவுளுக்கே எங்களை பிடிக்கவில்லை என்றால், நாம் ஏன் அவரை வணங்க வேண்டும். டாக்டர் பி ஆர் அம்பேத்கரை வணங்கிக்கொள்கிறோம்”, என்று ஷோபம்மா விரக்தியுடன் கூறிய செய்தி அனைவரையும் சிந்திக்க செய்துள்ளது. அவரது கிராமத்தில் மத ஊர்வலம் நடந்தபோது அவரது மகன் கடவுள் சிலையோடு இணைக்கப்பட்டு இருந்த ஒரு கம்பத்தைத் தொட்டதற்காக ஷோபம்மாவுக்கு அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் ரூ. 60,000 அபராதம் செலுத்த காலக்கெடு விதிக்கப்பட்டது. இதில் குற்றம் என்ன என்றால் ஷோபம்மா தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுதான்.
View this post on Instagram
சிலையை தொட்ட சிறுவன்
பெங்களூரில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் உள்ள உல்லேரஹள்ளியில், ஷோபம்மா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். செப்டம்பர் 9 அன்று, ஷோபம்மா தனது மகன் குற்றம் செய்ததாக கூறி தண்டிக்கப்பட்டதாக அவருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் நடந்ததை அறிந்துகொண்டு, கோலாரின் சில தலித் அமைப்புகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தபோதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செப்டம்பர் 8 அன்று, கிராம மக்கள் பூதையம்மா திருவிழாவை நடத்தியதால், தலித்துகள் கிராம தெய்வத்தின் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கிராமத்தில் ஊர்வலம் செல்லும்போது வெளியில் இருந்த ஷோபம்மாவின் 15 வயது மகன், கிராமத்தின் தெய்வமான சிடிரண்ணாவின் சிலையுடன் இணைக்கப்பட்டிருந்த கம்பத்தை தொட்டார். அதனை கவனித்த கிராமவாசியான வெங்கடேசப்பா, அத்துமீறல் நடந்ததாகக் கூறி, அவரது குடும்பத்தினரை ஊர் பெரியவர்களிடம் ஆஜராகச் சொல்லி உள்ளதாக தெரியவந்துள்ளது
ரூ.60,000 அபராதம்
அடுத்த நாள், ஊர் பெரியவர்களைச் சந்தித்த ஷோபம்மாவிடம், அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் ரூ.60,000 அபராதம் கட்டச் சொன்னதையடுத்து கடும் அதிர்ச்சிக்குள்ளானார். அபராதம் கட்டத் தவறினால், “கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவார்" என்றும் கூறப்பட்டது. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, கிராமத்தில் கிட்டத்தட்ட 75-80 வீடுகள் உள்ளன, மேலும் பெரும்பாலான குடும்பங்கள் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவை. அந்த கிராமத்தில் சுமார் 10 பட்டியலின குடும்பங்கள் உள்ளன. ஷோபம்மாவின் வீடு, பட்டியலினத்தவர் வாழும் கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ளது. அவரது மகன் தெகல் கிராமத்தில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஷோபம்மாவின் கணவரான ரமேஷ் நோய்வாய்ப்பட்டிருப்பதால், குடும்பத்தின் ஒரே ஆதாரமாக ஷோபம்மா வேலைக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.
அதிர்ச்சியடைந்த சிறுவனின் அம்மா
தினமும் காலை 5.30 மணிக்கு ரெயிலில் பெங்களூரு சென்று வைட்ஃபீல்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு பராமரிப்பு ஊழியராக வேலை செய்துவிட்டு இரவு 7.30 மணிக்கு வீடு திரும்புகிறார். அவருக்கு ரூ.13,000 சம்பளம், அதைவைத்து வீட்டை நடத்திக் கொண்டிருக்கும் அவருக்கு ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டது அதிர்ச்சியாக இருந்ததாக கூறி உள்ளார். கிராமப் பெரியவர்கள் என்ன சொன்னார்கள் என்று கேட்டதற்கு, ஒரு தலித் சிறுவன் சிலையைத் தொட்டதால் அது தூய்மையற்றதாக மாறிவிட்டது என்றும், அதைச் சுத்திகரித்து சிலைக்கு மீண்டும் பூச வேண்டும் என்றும், அபராதத் தொகை அதனை செய்வதற்கு பயன்படுத்தப்படும் என்றும் ஷோபம்மா கூறினார்.
நாங்கள் தொடுவது பிடிக்கவில்லையா?
“கடவுளுக்கு நாம் தொடுவது பிடிக்கவில்லை என்றால், மக்கள் நம்மை ஒதுக்கி வைக்க விரும்பினால், நாம் பிரார்த்தனை செய்து என்ன பயன்? மற்றவர்களைப் போலவே நானும் பணத்தைச் செலவழித்திருக்கிறேன், கடவுளுக்கு நன்கொடை அளித்திருக்கிறேன். இனிமேல், நான் அப்படி எதுவும் செய்யமாட்டேன், டாக்டர் பி ஆர் அம்பேத்கருக்கு மட்டுமே பிரார்த்தனை செய்துகொள்கிறேன்,”என்று அவர் கூறியுள்ளார். அம்பேத்கர் சேவா சமிதியை நடத்தும் உள்ளூர் ஆர்வலர் சந்தேஷ், திங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் குறித்து அறிந்ததாகவும், குடும்பத்தை சந்திக்க விரைந்ததாகவும் கூறினார். “நான் அவர்களின் வீட்டிற்குச் சென்று, காவல்துறையில் புகார் அளிக்க உதவினேன். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், இதுபோன்ற சமூக அவலங்கள் இன்னும் நடைமுறையில் இருந்தால், ஏழை மக்கள் எங்கே போவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
போலீசார் நடவடிக்கை
தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த கோலார் துணை ஆணையர் வெங்கட் ராஜா இதுகுறித்து பேசுகையில், அவர் புதன்கிழமை கிராமத்திற்குச் சென்று குடும்பத்தினரை சந்தித்தார். "நாங்கள் அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு ஒரு இடத்தைக் கொடுத்துள்ளோம், அவர்களுக்கு கொஞ்சம் பணம் கொடுத்துள்ளோம். ஷோபம்மாவுக்கு சமூக நல விடுதியிலும் வேலை வழங்குவோம். குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் கைது செய்யுமாறு போலீஸாருக்குத் தெரிவித்துள்ளேன், அவர்கள் பணியில் உள்ளனர்” என்று ராஜா கூறினார். இதற்கிடையில், முன்னாள் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் நாராயணசாமி, கிராமப் பிரதானின் கணவர் வெங்கடேசப்பா, பஞ்சாயத்து துணைத் தலைவர் மற்றும் இன்னும் சிலரின் மீது சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் பயன்படுத்தி வழக்கு பதிந்துள்ளனர்.
தொடரும் சம்பவங்கள்
கர்நாடகாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது புதிதல்ல. கடந்த ஆண்டு, கொப்பல் மாவட்டத்தில் உள்ள மியாபூர் கிராமத்தில், ஒரு சிறுவன் உள்ளூர் கோவிலுக்குள் நுழைந்ததற்காக, ஒரு தலித் குடும்பத்திற்கு கிராம தலைவர்களால் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இப்பிரச்னையை கையிலெடுத்த அரசு, தீண்டாமையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வுத் திட்டமான வினய சமரஸ்ய யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில் இந்துமதத்தில், மனு தர்மத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆ.ராசா எம்பி பேசிய பேச்சு இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.