வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு.. பொருளாதாரம் மோசமடையும் அபாயம்!
கடந்த 2010 முதல் 2020 வரையிலான ஆண்டில், இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 26 சதவிகிதத்தில் இருந்து 19 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பல கோடிக்கணக்கான பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் பறிபோயுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, வெகுசில வாரங்களில், நாடு முழுவதும் சுமார் 10 கோடி பேர் வேலை இழந்ததோடு, தங்கள் கிராமங்களுக்குத் திரும்பினர்.
தற்போதைய சூழலில், உலகம் மீண்டும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் நிலையில், பொருளாதார அறிஞர்கள் மீண்டும் ஒரு பிரச்னைக்குரிய விவகாரத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர். நாடு முழுவதும் தொழிலாளர்களுள் பெண்கள் பணிக்குத் திரும்பாதது சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் இருந்து பல ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்புக்குக் காரணமாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றுக்குப் பிறகு, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெண்கள் பணிகளில் இருந்து விலகியிருப்பது இந்தியாவைப் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏமன் நாட்டைப் போல மாற்றியுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2010 முதல் 2020 வரையிலான ஆண்டில், இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 26 சதவிகிதத்தில் இருந்து 19 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட சூழல் காரணமாக, 2022ஆம் ஆண்டில் பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 9 சதவிகிதமாகக் குறைந்ததாகக் கூறப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்கு முன் இந்தியாவின் பொருளாதாரம் மந்தமடைந்திருந்த நிலையில், தற்போதைய இந்தத் தரவுகள் இந்தியப் பொருளாதாரம் மோசமடையவுள்ளதைக் குறிப்பதாக பொருளாதார அறிஞர்கள் கூறியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். எனினும், அவரது நிர்வாகத்தின் கீழ், பணிக்குச் செல்லும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இந்தியாவின் கிராமப்புறங்களில் சுமார் 100 கோடி மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், பழமைவாதம் காரணமாக பெண்கள் பணிக்குச் செல்வது இல்லை. இந்தியாவின் பொருளாதார மாற்றங்களுக்குப் பிறகு, நகர்ப்புறங்களின் பெண்கள் பல்வேறு கடினமான முயற்சிகளுக்குப் பிறகு பணிக்குச் செல்கின்றனர்.
பணிக்குச் செல்லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவேளை சுமார் 58 சதவிகிதமாக இருப்பதால், இது 2050ஆம் ஆண்டின் போது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மேலும், இந்தியா முழுவதும் பெண்களின் மக்கள்தொகை சுமார் 48 சதவிகிதம் இருந்தாலும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெண்களின் பங்கு சுமார் 17 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது. சீனாவில் இதே பங்கு சுமார் 40 சதவிகிதமாக உள்ளது.
அதிகரிக்கும் வீட்டு வேலைகள், குழந்தைகள் பாதுகாப்புக்கான போதிய இடங்கள் இல்லாமை, அதிகரிக்கும் திருமணங்களின் எண்ணிக்கை முதலானவையே பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துள்ளது. பெண்களைப் பணிக்கு அனுப்புவதைக் கௌரவ குறைச்சலாக பார்க்கும் இந்தியக் கலாச்சாரப் பின்னணிக்கும் இதில் தொடர்புண்டு.