watch Video: பிரிந்த கூடாரங்கள்... பறந்த டிராக்டர்கள்.... வெற்றி போராட்டத்திற்குப் பின் பஞ்சாப் திரும்பும் விவசாயிகள்!
மனம் தளராமல் ஒரு வருடத்திற்கு மேலாக நின்று நடத்தி மாபெரும் வெற்றி அடைந்து எந்த சலனமும் இல்லாமல், தங்கியிருந்த இடத்தை சுத்தம் செய்து, கூடங்களை பிரித்து விவசாயப்பணிக்கு திரும்புகிறார்கள்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், வேளாண் சீர்திருத்தம் என்ற பெயரில் 3 சட்டங்களை இயற்றியது. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், விவசாயிகளுக்கு (அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களும் விவசாயிகளின் நலன்களுக்கு ஏற்றவை, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கும் விற்க முடியும், வேளாண் துறையில் அன்னிய முதலீடுகள் வரும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் அவற்றை விவசாயிகள் ஏற்கவில்லை. இந்த 3 சட்டங்களும் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்கு வேட்டு வைத்து விடும், சந்தைகளை முடிவுக்கு கொண்டு வந்து விடும், கார்ப்பரேட் என்னும் பெரு நிறுவனங்களிடம் விவசாயிகள் கையேந்தும் நிலையை ஏற்படுத்தி விடும் என்று உறுதிபடக் கூறினார்கள். இந்த சர்ச்சைக்குரிய 3 சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியின் எல்லைகளை ‘சம்யுக்தா கிஷான் மோர்ச்சா’ என்ற அமைப்பின் கீழ் 40 விவசாய சங்கங்களை சேர்ந்த வடமாநில விவசாயிகள் முற்றுகையிட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி போராட்டம் நடத்த தொடங்கினார்கள். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. அவற்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தும் விவசாயிகள் போராட்டம் நீடித்தது.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி கடந்த மாதம் 19-ந்தேதி அதிரடியாக அறிவித்தார். 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதற்கான சட்ட நடைமுறைகள், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றி முடிக்கப்படும் என வாக்குறுதியும் அளித்தார். ஆனாலும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர். இருப்பினும், போராட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் போட்ட அனைத்து வழக்குகளும் ரத்துசெய்யப்பட வேண்டும், போராட்டத்தில் பலியான அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் இழப்பீடு தர வேண்டும், வைக்கோல் எரிப்பு விவகாரத்தில் விவசாயிகள் மீது வழக்கு கூடாது, மின்சார திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு முன் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பேச வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி விவாதிக்க அமைக்கப்பட உள்ள குழுவில் சம்யுக்தா கிஷான் மோர்ச்சா தங்கள் உறுப்பினர்களை பட்டியலிட்டு அரசுக்கு தரும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை மற்றும் கொள்முதல் தொடர்பாக தற்போதுள்ள கொள்கை தொடர வேண்டும் என்ற 6 கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஆனாலும் விவசாயிகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து இடைவிடாது பேச்சுவார்த்தை நடத்தியது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் சம்யுக்தா கிஷான் மோர்ச்சா கூறும்போது, “நிலுவையில் உள்ள எங்களது கோரிக்கைகள் தொடர்பான மத்திய அரசின் மாற்றியமைக்கப்பட்ட வரைவு திட்டத்தில் ஒருமித்த கருத்தை எட்டி உள்ளோம்” என கூறியது. ஆனாலும் இது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எழுத்துபூர்வமான தகவல் வர வேண்டும் என்றும் வலியுறுத்தியது. அதன்படி, விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலை குழுவை அமைத்தல் உள்ளிட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை ஏற்க ஒப்புக்கொண்டு மத்திய அரசின் கையெழுத்திட்ட கடிதம் சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பிடம் நேற்று வழங்கப்பட்டது.
#WATCH प्रदर्शनकारी किसान टिकरी बॉर्डर से प्रदर्शन स्थल खाली करके वापस जा रहे हैं। संयुक्त किसान मोर्चा ने आज से प्रदर्शन स्थल खाली करने की घोषणा की थी। pic.twitter.com/sipulT092D
— ANI_HindiNews (@AHindinews) December 11, 2021
#WATCH | Farmers take down their settlements, vacate the borders around Delhi and return to their homes after the announcement of the suspension of their year-long protest.
— ANI (@ANI) December 11, 2021
Visuals from Singhu border (Delhi-Haryana border). pic.twitter.com/3gV4vtLHDu
இதையடுத்து விவசாயிகள் போராட்டம் உடனடியாக முடிவுக்கு வந்துள்ளது. அதன்பிறகு, விவசாயிகளும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட இருப்பதால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்பினர். இத்தனை நாட்கள் கூடாரம் அமைத்து தங்கிய விவசாயிகள் கூடாரங்களை பிரித்து வீடு திரும்புகிறார்கள். அதுமட்டுமல்லாது, தாங்கள் தங்கியிருந்த பகுதிகளில் குவிந்துகிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். கடந்த 378 நாட்களாக, எல்லா பருவநிலைகளையும் தாண்டி நின்று விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், உடல்நலம் குன்றியவர்கள் ஒரு பகுதி. நோயுற்றவர்கள் ஒரு பகுதி. உயிரிழந்தவர்கள் 700 பேர் என்று, அடுக்கடுக்கான சோகங்களை தாங்கிய பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது. இவ்வளவு பெரிய போராட்டத்தை கொஞ்சமும் மனம் தளராமல் ஒரு வருடத்திற்கு மேலாக நின்று நடத்தி மாபெரும் வெற்றி அடைந்து எந்த சலனமும் இல்லாமல், தங்கியிருந்த இடத்தை சுத்தம் செய்து, கூடங்களை பிரித்து திரும்பவும் விவசாயப்பணிக்கு திரும்புகிறார்கள் இரும்பு மனிதர்கள்.