சஞ்சய் ராவத் கைது... குறி வைக்கப்படுகிறாரா உத்தவ் தாக்கரே?
இருமுறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை இயக்குனரக அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.
பணமோசடி வழக்கில் விசாரணைக்கு இருமுறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை இயக்குனரக அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை மேற்கோள் காட்டி இருமுறை சம்மன் அனுப்பியும், சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை.
இதையடுத்து, ஜூலை 27 அன்று அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. காலை 7 மணியளவில், சிஐஎஸ்எஃப் அலுவலர்கள் அடங்கிய புலனாய்வு குழுவினர் மும்பையின் கிழக்குப் புறநகர்ப் பகுதியில் உள்ள பாண்டப்பில் உள்ள ராவத்தின் வீட்டிற்குச் சென்று விசாரணையை தொடங்கினர்.
மும்பை குடியிருப்பு வளாகத்தின் மறுசீரமைப்பு பணிகள், அது தொடர்பான ராவத்தின் மனைவி மற்றும் நெருங்கிய உதவியாளர்களின் பண பரிவர்த்தனை குறித்து சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள விரும்புகிறது. உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளரான ராவத், எந்த தவறும் செய்யவில்லை என்றும், அரசியல் பழிவாங்கல் காரணமாக தான் குறிவைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
“தவறான நடவடிக்கை, பொய்யான ஆதாரம். சிவசேனாவை விட்டு விலக மாட்டேன். நான் இறந்தாலும் சரணடைய மாட்டேன். எனக்கும் எந்த ஊழலுக்கும் சம்பந்தம் இல்லை என சிவசேனா தலைவர் பாலாசாஹேப் தாக்கரே மீது சத்தியம் செய்து கூறுகிறேன். பாலாசாஹேப் எங்களுக்கு போராட கற்றுக்கொடுத்தார். சிவசேனாவுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்" என விசாரணை முகமை அலுவலர்கள் அவரது வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே ராவத் ட்வீட் செய்தார்.
சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ராவத்திற்கு பதிலடி கொடுத்த பாஜக, "அவர் நிரபராதி என்றால் அவர் ஏன் அமலாக்கத்துறை இயக்குநரகத்திற்கு பயப்படுகிறார்? செய்தியாளர் சந்திப்பு நடத்த அவருக்கு எல்லா நேரமும் உள்ளது. ஆனால் விசாரணைக்கு விசாரணை முகமை அலுவலகத்திற்குச் செல்ல நேரமில்லை" என சாடியுள்ளது.
ஏராளமான சிவசேனா தொண்டர்கள் ராவுத்தின் இல்லத்திற்கு வெளியே கூடி, அமலாக்கத்துறை மற்றும் பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மாநிலங்களவை எம்பி ராவத்திடம் ஜூலை 1ஆம் தேதி சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பணமோசடி தடுப்புச் சட்ட குற்றப் பிரிவுகளின் கீழ் அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம், அமலாக்கத்துறை இயக்குனரகம் தனது விசாரணையின் ஒரு பகுதியாக ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் மற்றும் அவரது உதவியாளர்கள் இருவரின் 11.15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்தது.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் வர்ஷா ரவுத் தாதரில் உள்ள ஒரு பிளாட், அலிபாக்கில் உள்ள கிஹிம் கடற்கரையில் வர்ஷா ரவுத் மற்றும் சஞ்சய் ராவத்தின் நெருங்கிய நண்பர் சுஜித் பட்கரின் மனைவி ஸ்வப்னா பட்கர் ஆகியோர் இணைந்து வைத்திருக்கும் எட்டு மனையும் அடங்கும். 1,034 கோடி ரூபாய் நிலம் மோசடி தொடர்பான விசாரணையில் பிரவின் சிராவத் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்