காங்கிரஸ்க்கு நோ... களத்தில் குதிக்க தயார்? - பிரசாந்த் கிஷோரின் அதிரடி ப்ளான் இதுதானா?
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய மறுத்த நிலையில், அவர் பீகாரில் புதிய கட்சித் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய மறுத்த நிலையில், அவர் தனியாக கட்சி ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, கெஜ்ரிவால், ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக வேலை பார்த்த பிரஷாந்த் கிஷோரை, 2024ல் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு பயன்படுத்த காங்கிரஸ் கட்சித் திட்டமிட்டிருந்தது. இதற்காக சோனியாகாந்தி ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் அளித்திருந்தார். அவரை காங்கிரஸ் கட்சியில் சேருமாறு கட்சித் தலைமை வலியுறுத்தியிருந்தது. கட்சியில் இணைவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரஸில் இணையப்போவதில்லை என்று பிரசாந்த் கிஷோர் அதிரடியாக அறிவித்தார்.
சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த பிரஷாந்த் கிஷோர், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மூன்றாவது அணியாக நிறுத்தலாமா என்றபோது, நாட்டில் மூன்றாவது அணி அல்லது நான்காவது அணி தேர்தலில் வெற்றிபெறும் என்று இதுவரை நம்பியதில்லை. பாஜகவை முதல் அணி என்று கருதினால் அதை வெல்வது இரண்டாவது அணியாக தான் இருக்கவேண்டும். எந்த கட்சியாவது பாஜகவை வெல்லவேண்டும் என்று நினைத்தால் அது இரண்டாவது கட்சியாக வளர வேண்டும் என்று கூறியிருந்தார். இரண்டாவது அணியாக காங்கிரஸ் இருக்குமா என்று கேட்டபோது அது இந்தியாவில் இரண்டாவது பெரிய கட்சிதான் ஆனால், அது இரண்டாவது அணி அல்ல என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அவர் தனியாக கட்சித் தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கு எனது தேடலானது 10 வருட ரோலர்கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது. உண்மையான மாஸ்டர்களான மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன். பீகாரிலிருந்து அதை தொடங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.
பீகாரைச் சேர்ந்தவரான பிரசாந்த் கிஷோர், கட்சியை தனது மாநிலத்திலிருந்தே தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் இதுதொடர்பாக அவர் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. நிதிஷ் குமார் 2015ல் நடைபெற்ற பீகார் தேர்தலில் வெல்ல வியூகம் வகுத்ததோடு ஜனதா தளம் கட்சியிலும் பதவி வகித்தார். பின்னர் எழுந்த முரண்பாடுகள் காரணமாக ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து நிதிஷ் குமார் அவரை கட்சியில் இருந்து நீக்கினார். பீகாரில் இப்போதும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பிரசாந்த் கிஷோர் புதிய கட்சி தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.