Election Commissioner: பரபரப்பை கிளப்பிய ராஜினாமா.. தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து விலகிய அருண் கோயல்!
மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த அருண் கோயல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
![Election Commissioner: பரபரப்பை கிளப்பிய ராஜினாமா.. தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து விலகிய அருண் கோயல்! Election Commissioner Arun Goel Resigns Weeks Ahead Of Lok Sabha Elections 2024 Election Commissioner: பரபரப்பை கிளப்பிய ராஜினாமா.. தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து விலகிய அருண் கோயல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/09/87d599451750562489d45e56238b58241709999524648729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியாவை பொறுத்தவரையில், மக்களவை தேர்தல் தொடங்கி சட்டப்பேரவை தேர்தல் வரை, தேர்தல் நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையிடமே உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் கண்காணிப்பிலும்தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது.
அதுமட்டும் இன்றி, குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களையும் தேர்தல் ஆணையம்தான் நடத்தி வருகிறது. ஆனால், மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தலுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஏன் என்றால், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பொறுப்பு தனியாக இயங்கும் மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.
பரபரப்பை கிளப்பும் தேர்தல் ஆணையரின் ராஜினாமா:
அடுத்த மாத தொடக்கத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த அருண் கோயல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்று கொண்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ள நிலையில், தற்போது மற்றோர் தேர்தல் ஆணையர் பதவியும் காலியாகியுள்ளது. மூன்று பேர் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே உள்ளார். தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகித்து வருகிறார்.
தேர்தல் ஆணையத்தில் சமீபத்தில்தான் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டது. பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர் (அல்லது தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர்), இந்திய தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் கொண்ட கமிட்டி வழங்கும் பரிந்துரையின் பேரில் குடியரசு தலைவர் தேர்தல் ஆணையர்களை நியமிப்பார்கள்.
ஆனால், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை நியமிக்கும் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை நீக்கும் சட்டம் கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
யார் இந்த அருண் கோயல்?
பஞ்சாப் மாநில ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதே பெரும் சர்ச்சையை கிளப்பியது. கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக பதவி வகித்து வந்த அருண் கோயல், ஓய்வு பெறுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு விருப்ப ஓய்வு பெற்றார்.
அதற்கு அடுத்த நாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்து வரும் ராஜீவ் குமார், வரும் 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், ஓய்வு பெற உள்ளார். அவருக்கு பிறகு, தலைமை தேர்தல் ஆணையராக அருண் கோயல் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் திடீர் ராஜினாமா பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)