போடு வெடிய.. விஜய் கட்சிக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் தவெக!
இந்திய தேர்தல் ஆணையத்தால் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெகவுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்:
தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, அதன் தலைவர் விஜய் கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார். அதோடு, கட்சிப்பாடலையும் வெளியிட்டார்.
ஏற்கனவே, தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி பிரதிநிதிகள் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், விஜயின் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை அரசியல் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நடிகர் விஜயின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் போடும் மாஸ்டர் பிளான்:
வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இதற்கிடையே, தவெகாவின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
திருச்சி, சேலம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி என பல இடங்களின் தேர்வு நடைபெறும் நிலையில், த.வெ.க., தலைமையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கான வசதியுள்ள இடமாகவும், தமிழகத்தின் மைய பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக கொண்டு, ஆலோசனை செய்தனர்.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த விஜய் தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. மாநாட்டை நடத்த அனுமதி கேட்டு தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது. கட்சியின் முதல் மாநாடு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதையும் படிக்க: TVK Manadu: தவெக மாநாட்டுக்கு அனுமதி கிடைக்குமா? - போலீஸ் கேட்ட 21 கேள்விகள்... பதில் அளித்த புஸ்சி ஆனந்த்