கைதி படமேதான்.. லாரியில் ரகசிய ரூம்.. கடத்தப்பட்ட போதைப்பொருள் சிக்கியது எப்படி?
லாரியை வழிமறித்து வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 569 கிராம் ஹெராயின், 1,039 கிராம் மெத்தபெட்டமைன் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் லாரியின் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவால் அளித்து வருகிறது.
கைதி படத்தில் வருவது போன்ற கடத்தல்:
வடகிழக்கு பிராந்தியத்தில் வருவாய் புலனாய்வுத் துறையினர் 19 பிஎன் அசாம் ரைபிள்ஸின் உதவியுடன், மணிப்பூரின் நோனி, தேசிய நெடுஞ்சாலை 37இல் கடந்த மே மாதம் 21ஆம் தேதி அன்று ஒரு லாரியை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 569 கிராம் ஹெராயின், 1,039 கிராம் மெத்தபெட்டமைன் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் லாரியின் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
லாரியின் ரகசிய ரூமில் சிக்கிய போதைப்பொருள்:
மற்றொரு நடவடிக்கையில், கடந்த மே 22ஆம் தேதி அன்று சில்சார் அசாம் ரைபிள்ஸ் எஃப்ஐயு பிரிவு உதவியுடன், வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அசாமின் ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள அலோய்செராவில் ஒரு லாரியை வழிமறித்து சோதனையிட்டனர்.
அப்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,640.53 கிராம் ஹெராயின் போதைப்பொருளை அவர்கள் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட கடத்தல் போதைப்பொருட்கள் சர்வதேச சந்தையில் சுமார் ரூ.23.5 கோடி மதிப்புடையதாகும். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல், வடகிழக்குப் பிராந்தியத்தில் வருவாய் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.173 கோடி மதிப்பிலான கஞ்சா, மெத்தபெட்டமைன் மாத்திரைகள், ஹெராயின் போன்ற கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 26 பேரை கைது செய்துள்ளனர்.
சமீபத்தில், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் அருகே பக்ரோடா தொழில்பேட்டையில் போதைப்பொருள் கும்பலை குஜராத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) அதிகாரிகள் வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய சோதனையின்போது, சுமார் 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள மெபெட்ரோன் (எம்டி) போதைப் பொருட்களை அதிகாரிகள் மீட்டனர். நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்பட்டது.
இதையும் படிக்க: Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி





















