(Source: ECI/ABP News/ABP Majha)
Ayodhya Ram Mandir: ”அயோத்தி ராமர் கோயிலுக்கு இப்போதைக்கு போகாதீங்க" : பிரதமர் மோடி வேண்டுகோள்..
அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் நாட்களில் அதிகளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில்:
ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருவறையில் வைக்கப்பட்ட சிலைக்கு பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டு களித்தனர். கும்பாபிஷேகத்தில் அடுத்த நாளான ஜனவரி 23ஆம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அயோத்தி கோயிலில் அலைமோதும் பக்தர்கள்:
மக்களுக்கு திறந்துவிடப்பட்ட முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்ததாக உத்தர பிரதேச தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ராமர் கோயில் அறக்கட்டளை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜனவரி 23ஆம் தேதி, 3 கோடியே 17 லட்சம் ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில், நாட்டின் முக்கிய புனித தலமாக உருவெடுக்கும் என கருதப்படுகிறது. எனவே, கோடிக்கணக்கான மக்கள் ராமர் கோவிலுக்கு வந்து பணத்தை நன்கொடை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், ராமர் கோயில் அறிவிப்பு வெளியானதில் இருந்தே நன்கொடுகளை குவிந்து வருகின்றன. அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கு 5,000 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக அறக்கட்டளை ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தது.
பிரதமர் மோடி வேண்டுகோள்:
அதேபோல, வரும் நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு தற்போதைக்கு செல்ல வேண்டாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிகிறது.
நேற்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "அமைச்சர்கள் யாரும் தற்போது அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல வேண்டாம். ராமர் கோயிலில் கூட்டம் அதிகளவில் உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் குழந்தை ராமரை காண குவிந்து வருகின்றனர்.
இதனால், அமைச்சர்கள் செல்லும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படும். எனவே, மத்திய அமைச்சர்கள் மார்ச் மாதத்திற்கு பிறகு ராமர் கோயிலுக்கு செல்லலாம்" என்று தெரிவித்திருக்கிறார்.