Jaishankar - Rahul gandhi: ”ராகுல் காந்தி வெளிநாடு செல்லும்போதெல்லாம் இதே வேலை..” - அமைச்சர் ஜெய்சங்கர் காட்டம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டில் சென்று பேசுவது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாக பதிலளித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டில் சென்று பேசுவது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாக பதிலளித்துள்ளார்.
ஜெய்சங்கர் காட்டம்:
ராகுல் காந்தி வெளிநாடுகளில் சென்று பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சிப்பது குறித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்தபோது, ”ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் நாட்டை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தியாவில் அவர் என்ன செய்கிறார் என்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் அதை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதால் இந்தியாவுக்கு பலனில்லை” என ஜெய்சங்கர் காட்டமாக பதிலளித்துள்ளார்.
ராகுல் காந்தி கடும் விமர்சனம்:
10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடி வருகிறார். இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன, இந்தியாவில் குரல்வளைகள் முடக்கப்படுகின்றன என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதன்படி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி, பின்பக்க கண்ணாடியை மட்டும் பார்த்துக்கொண்டு இந்தியா எனும் காரை ஓட்ட முயற்சிக்கிறார். இது ஒன்றன் பின் ஒன்றாக விபத்துக்கு வழிவகுக்கும். இந்தியா எனும் வீட்டில் எங்களுக்கு ஒரு பிரச்னை இருக்கிறது. பிரச்னையை நான் உங்களுக்கு சொல்கிறேன். பிஜேபியும் ஆர்எஸ்எஸ்ஸும் எதிர்காலத்தைப் பார்க்கத் தகுதியற்றவர்கள். அவர்கள் திறமையற்றவர்கள் என ஆவேசமாக பேசினார்.
கடவுளுக்கே பாடம்:
சாண்டா கிளாராவில் நடந்த மற்றொரு நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி , பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். அதன்படி, எந்தவொரு மனிதனும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உலகம் மிகவும் பெரியது மற்றும் சிக்கலானது. ஆனால், இந்தியாவில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று உறுதியாக நம்பும் ஒரு குழு உள்ளது. அவர்கள் கடவுளை விட அதிகமாகத் தெரியும் என்று நினைக்கிறார்கள். மோடிஜியை கடவுளுடன் உட்கார வைத்தால், பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர் கடவுளுக்கு விளக்குவார் என விமர்சித்து இருந்தார்.
ஜெய்சங்கர் பதிலடி:
இந்த நிலையில் தான் கேப்-டவுனில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளை சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்க இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு சென்றுள்ளார். அவரிடம் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “நாட்டை விட்டு வெளியே வரும்போது செய்வதற்கு அரசியலை காட்டிலும் பல பெரிய விஷயங்கள் உள்ளன. ராகுல் காந்தி போன்றோரின் செயல்பாடுகளுக்கு நான் எதிரானவன். ஆனால் தற்போது நான் அவர்களுக்கு பதிலளிக்கிறேன். நாடு திரும்பியதும் அவர்களுக்கான பதிலை வழங்குவேன் அப்போது பாருங்கள்” என குறிப்பிட்டு இருந்தார். அதைதொடர்ந்து தான் தற்போது ராகுல் காந்தியை ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.