உண்மையிலேயே டாக்டர் தானா? - காயத்திற்கு ஃபெவிக்விக் போட்டு ஒட்டிய விபரீதம்!
இந்த சம்பவம் அம்மாநிலத்தில் உள்ள மீரட்டில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஜக்ரிதி விஹார் பகுதியில் சர்தார் ஜஸ்பிந்தர் சிங் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் குழந்தையின் இரத்தப்போக்கு காயத்திற்கு தையல் போடுவதற்குப் பதிலாக ஃபெவிக்விக் மூலம் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் அம்மாநிலத்தில் உள்ள மீரட்டில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஜக்ரிதி விஹார் பகுதியில் சர்தார் ஜஸ்பிந்தர் சிங் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வீட்டின் ஹாலில் இருந்த மேஜையின் மூலையில் தலை மோதியதாக கூறப்படுகிறது. இதனால் நெற்றியில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் வரத் தொடங்கியுள்ளது. காயம் ஏற்பட்டதும் நிலை குலைந்த சிறுவன் வலியால் கதறி துடித்துள்ளான்.
உடனடியாக சிறுவனை மீட்ட குடும்பத்தினர் வீட்டில் முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டின் அருகிலிருந்த பாக்யஸ்ரீ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போடாமல் ரூ.5 மதிப்புள்ள ஃபெவிக்விக் டியூப்பை வாங்கி அதனை பேண்டேஜில் ஒட்டி சிகிச்சையளித்திருக்கிறார்.
இந்த நிலையில் குடும்பத்தினர் தெரிவித்துள்ள தகவலின்படி, காயத்தின் வீரியத்தால் குழந்தை வலியால் அழுது கொண்டே இருந்தது. இதனால் குழந்தைக்கு ஏற்பட்ட பதட்டத்தை குறைக்கும் பொருட்டும், ஃபெவிக்விக் போட்டு ஒட்டுவதால் வலி குறையும் என்றும் மருத்துவர் கூறினார் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் இரவு முழுவதும் குழந்தை அழுதுக் கொண்டே இருந்துள்ளது. மேலும் அசௌகரியம் நீடித்ததால் மறுநாள் காலை சிறுவனை குடும்பத்தினர் லோக்பிரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஃபெவிக்விக் போட்டு ஒட்டியதால் சிறுவன் நெற்றியில் இருந்த பேண்டேஜை அகற்றுவதற்குள் மருத்துவர்கள் கடுமையாக போராடினர். கிட்டதட்ட 3 மணி நேரம் போராடி அந்த பேண்டேஜை அகற்றினர். பின்னர் காயத்தை சுத்தம் செய்து நான்கு தையல்கள் போடப்பட்டது.
ஒருவேளை ஃபெவிக்விக் திரவம் சிறுவனின் கண்ணில் பட்டிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி கண் பார்வை பறிபோயிருக்கும். இதுதொடர்பாக சிறுவனின் குடும்பத்தினர் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். உடனடியாக அந்த வீடியோ மீரட் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அசோக் கட்டாரியா, கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து சட்டப்படி குழந்தையின் கு2டும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதியாகும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாக்டர் அசோக் கட்டாரியா தெரிவித்துள்ளார். சமீபகாலமாக மருத்துவத்துறையில் இதுபோன்ற எதிர்மறை சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. எனவே பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





















