இந்திராகாந்தி பலமுறை மன்னிப்பு கேட்டார்; பாஜகவுக்கு அருகதை இல்லை - ஆ.ராசா சரவெடி பேச்சு
240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என எப்படி கூற முடியும். - ஆ.ராசா
குடியரசுத்தலைவர் உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் திமுக எம்.பி ராசா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம். பாஜக அரசு நினைப்பதை அவர்களாக சொல்வதில்லை. குடியரசுத் தலைவர், சபாநாயகர் மூலம் சொல்ல வைக்கின்றனர். திராவிட கொள்கை ஏன் தேவை என்பதை பாஜக உணர வேண்டும். 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என எப்படி கூற முடியும். பாசிச கொள்கையை கடைபிடிக்கும் பாஜக அவசர நிலை பிரகடனம் பற்றி பேச அருகதை இல்லை. எமெர்ஜென்சியை அமல்படுத்தியதற்கு இந்திராகாந்தி பலமுறை மன்னிப்பு கேட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பாசிச கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 40 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கியுள்ளனர்.
பெரியாரின் திராவிட மண்ணில் இருந்து இங்கு வந்துள்ளேன். திராவிட மண்ணில் பாஜகவுக்கு பாடம் புகட்டியுள்ளனர். சிறுபான்மையினர், பட்டியலினத்தோரை பாஜக அரசு நசுக்கப்பார்க்கிறது” எனப்பேசினார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இன்றைய அமர்வு சுவாரஸ்யமாக அமைந்தது. விவாதங்கள், எதிர்க்கட்சி தலைவருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பதில் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசுவது குழப்பமாக உள்ளதாக குறிப்பிட்டு ஆ.ராசா பேசுகையில், “பாஜக 370 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களில் தேர்தலில் வெற்றி பெற்றும் என்று பிரதமர் மோடி பேசியிருந்தார். ஆனால், பாஜக வெறும் 240 இடங்களையே பிடித்தது. 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்ற பாஜக தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என்று எப்படி கூற முடியும்? பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை இன்னும் அவர்கள் உணரவில்லை.”என்று குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது அவசரநிலை பிரகடனம் செய்தது குறித்து தொடர்ந்து பேசிவரும் நிலையில் அது தொடர்பாக ஆ.ராசா பேசுகையில், “ காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலை பிரகடனம் செய்தது. பத்திரிகை சுதந்திரம் இல்லை. மக்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மட்டும் அவர்கள் நடவடிக்கை எடுத்தனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அந்த முடிவு வருத்தம் தெரிவித்தார். அதற்கு பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பிற்காகவே இப்படி செய்தார். ஆனால், அவர்கள் தங்களது தவறை உணர்டந்துகொண்டனர். ” என்று தெரிவித்தார்.
பா.ஜ.க. அரசு பெரும்பான்மைத்துவம், இந்து மதம் என்பதை முன்னிறுத்தி இந்து அல்லாதவர்கள், சிறுபான்மையினர், தலித், ஆதிவாசி, பழங்குடியினர் உள்ளிட்ட மக்களை மதத்தின் பெயரால் ஒடுக்கப்படும் நிலையே நிலவுகிறது. இது ஃபாசிசம். அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டபோது மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டினர். காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்பு கேட்னர். மக்கள் அவர்களின் செயலுக்கு வாய்ப்பு அளித்ததும் நிராகரித்ததும் அனைவரும் அறிந்ததே. ஆனால், பா.ஜ.க. அரசு செய்துள்ள செயல்களுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டு பேசினார்.