Uniform Civil Code : நிலைக்குழு கூட்டத்தில் அனல் பறந்த விவாதம்..பொது சிவில் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு.!
பிரதமர் மோடியின் பேச்சின் மூலம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுத்து வருவது தெளிவாகிறது. ஆனால், இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் பாஜக:
கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது. வெவ்வேறு சமூகங்களுக்கு தனி சட்டங்கள் என்ற இரட்டை அமைப்புடன் நாடு இயங்க முடியாது. எந்த அரசியல் கட்சிகள், தங்களின் சுய பலன்களுக்காக, இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு அவர்களை அழிக்க முற்படுகிறார்கள் என்பதை இந்திய முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என பேசியிருந்தார்.
பிரதமர் மோடியின் பேச்சின் மூலம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுத்து வருவது தெளிவாகிறது. ஆனால், இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
நிலைக்குழு கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு:
இந்த நிலையில், சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், பொது சிவில் சட்டம் (யு.சி.சி.) தொடர்பாக கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பிக்கள், "21ஆவது சட்ட ஆணைய அறிக்கையில் யுசிசி தேவையில்லை என்று தெளிவாக கூறியுள்ளது. எனவே, அதை கொண்டு வருவதற்கான நோக்கம் எங்கிருந்து வந்தது" என்றனர்.
நிலைக்குழு கூட்டத்தில் பொது சிவில் சட்டத்திற்கு திமுக, பாரத் ராஷ்டிரிய சமிதி (பி.ஆர்.எஸ்) எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். "பழங்குடியினர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென் மாநில மக்கள், சிலர் வெவ்வேறு சடங்குகளைக் கொண்டிருப்பதால் அவர்களின் உரிமைகளுக்கு என்னாகும்" என திமுக, பி.ஆர்.எஸ் எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.
"பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மாநிலங்களுக்கு ஏற்ப சடங்குகள் பற்றி முடிவெடுக்கும் உரிமையை பறிக்கும்" என திமுக எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சுஷில் குமார் மோடி, இதற்கு பதில் அளித்து பேசுகையில், "இது குறித்து மற்றொரு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைவரின் ஆலோசனையை கேட்போம்" என்றார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக பகுஜன் சமாஜ் கட்சி எம்பி சாடினார்.
முன்னதாக, பொது சிவில் சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், "உள்நோக்கம் கொண்ட பெரும்பான்மை அரசாங்கத்தால் பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது. ஏனெனில், அது மக்களிடையே பிளவுகளை விரிவுபடுத்தும்" என்றார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பிரதமர் பேசும்போது, ஒரு நாட்டை குடும்பத்துடன் ஒப்பிட்டுள்ளார். சுருக்கி பார்த்தால் அவரது ஒப்பீடு உண்மையாகத் தோன்றினாலும், களத்திலோ உண்மை வேறாக உள்ளது. ஒரு குடும்பம் ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டது. ஆனால், ஒரு தேசமோ அரசியல் சட்ட ஆவணமான அரசியலமைப்பின் மூலம் ஒன்றிணைக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.