Arvind Kejriwal: டெல்லி மக்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் - ஆர்.கே. நகர் சம்பவம் குறித்து முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்து!
Arvind Kejriwal: சட்டம், ஒழுங்கு நிர்வாகம் மாநில அரசின் கீழ் இருந்தால் டெல்லி பாதுகாப்பாக இருந்திருக்கும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி மக்கள் மிகவும் பாதுகாப்பறவர்களாக உணரத் தொடங்கியுள்ளனர் என்று டெல்லி ஆர்.கே. புரத்தில் சகோதரிகள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
சட்டம், ஒழுங்கு நிர்வாகம் மாநில அரசின் கீழ் இருந்தால் டெல்லி பாதுகாப்பாக இருந்திருக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சகோதிகளை சுட்டுக் கொன்ற 3-பேர் கைது
டெல்லி ஆர்.கே.புரத்தில் சகோதரிகளான பிங்கி,ஜோதியை சுட்டுக்கொன்ற வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சகோதரனை சுடவந்த கொலையாளிகள் 2 சகோதரிகளையும் சுட்டுக் கொன்றதாக காவல்துறை விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பு சம்பவம்:
டெல்லியில் அதிகாலையிலேயே இளம்பெண்கள் இரண்டு பேர் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச் சூடு
அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் காவல்நிலையத்திற்குட்பட்ட அம்பேத்கர் பஸ்தி பகுதியில் அதிகாலை 4.30 மணியளவில் மர்ம நபர்கள் இரண்டு துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அப்போது, ஒரு வீட்டிற்கு வெளியே நின்று ஒரு நபருடன், இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் நீடித்த நிலையில், ஒருவரைக்கொருவர் அடித்துக் கொண்டனர். பின்னர், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சம்பந்தப்பட்ட நபரை சுட முயன்றனர்.
அப்போது குறி தவறி அருகில் இருந்த இரண்டு இளம்பெண்கள் மீது குண்டு பாய்ந்தது. இதனால் இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். பின்னர், இரண்டு இளம்பெண்களையும் சுட்டுவிட்டு அங்கிருந்து அந்த மர்மநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இருவர் உயிரிழப்பு
உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு இளம்பெண்களையும் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக எஸ்.ஜே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவ குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, துப்பாக்கியால் சுடப்பட்ட இருவரும் பிங்கி(30), ஜோதி(29) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் உயிரிழந்த இரண்டு இளம்பெண்களின் சகோதரரை பார்க்க வந்ததாகவும், இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்தை கேட்பதற்காக உயிரிழந்த பெண்களின் சசோதரரிடம் பேச வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது அருகில் இருந்த இரண்டு பெண்கள் மீது தவறுதலாக குண்டு பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.